காவிரி மேலாண்மை ஆணையம் ஜூன் 24ல் மீண்டும் கூடுகிறது
காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் மிகவும் கீழே போய் விட்டது.
இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி நீரை கர்நாடகா தர வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், ஜூன் தொடக்கத்தில் 4.5 டிஎம்சி நீர் வர வேண்டிய நிலையில் வெறும் 1 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் வருகிற ஜூன் 24-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. ஜூலை மாதத்திற்குள் காவிரியில் 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என தமிழக அரசு, இந்த கூட்டத்தில் வலியுறுத்தவிருக்கிறது.