அசத்தும் அழகு பெற எளிய வழிகள்

சரும பராமரிப்பை குறித்த விழிப்புணர்வு நம்மிடையே அதிகரித்துள்ளது. என்னதான் பரபரப்பாக வாழ்க்கை முறை மாறியிருந்தாலும், நன்றாக தோற்றமளிக்க வேண்டும் என்ற அக்கறையின் காரணமாக பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். பிரபல அழகு நிலையங்களுக்குச் செல்வோர் அநேகர். சரும பராமரிப்பு, அதிக செலவு பிடித்தஒன்றாக மாறிவிட்டது.

எளிதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கும் பொருள்களை பயன்படுத்தி முகத்தை அழகாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே சரும நோய் மற்றும் பரு போன்ற பாதிப்புகள் இருந்தால் இவற்றை தவிர்த்துவிடுங்கள். உரிய சிகிச்சைக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே செய்யுங்கள்.

பிரச்னை ஏதும் இல்லைங்க... முகம் இன்னும் கொஞ்சம் பளபளப்பாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறவர்கள் தாராளமாக இவற்றை முயற்சித்துப் பார்க்கலாம்.

தேனும் ஆரஞ்சும்:

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடித்துக்கொள்ளவும். ஆரஞ்சு தோல் பொடி மற்றும் ஓட்ஸ் பொடி இரண்டையும் இரண்டு மேசைக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் ஒரு மேசைக்கரண்டி அளவு தேன் சேர்க்கவும். சிறிது நீர் சேர்த்து இதை பசைபோன்று கலக்கவும். முகத்தை சுத்தமாக்கிக் கொண்டு இந்தப் பசையை சிறிது எடுத்து விரலை வட்டம் போல சுழற்றி (circular motions) முகத்தில் பூசிக்கொள்ளவும். முகம் முழுவதும் பூசிய பின்னர் சிறிது நேரம் காத்திருக்கவும். பின்னர் முகத்தை கழுவவும்.

வாழைப்பழம்:

நன்றாக பழுத்த இரண்டு வாழைப்பழங்களை மசித்துக்கொள்ளவும். அதனுடன் கேக் ஐஸிங் செய்ய பயன்படுத்தும் பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். ஒரு மேசைக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி இதமாக மசாஜ் செய்யவும். ஐந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

தயிரும் பப்பாளியும்:

நன்கு கனிந்த பப்பாளி பழத்தை மசித்து அரை கப் எடுத்துக்கொள்ளவும். நீர் நீக்கிய தயிர் இரண்டு மேசைக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ளவும் (தயிரை துணி ஒன்றில் கட்டி மூன்று முதல் நான்கு மணி நேரம் தொங்க விட்டால் அதிலுள்ள நீர் வடிந்து விடும். பின்னர், அதை நன்கு அழுத்தி மீதமிருக்கும் நீரையும் அகற்றிவிட்டு துணியில் எஞ்சியிருக்கும் தயிரை பயன்படுத்தலாம் - hung curd). இதனுடன் எலுமிச்சை சாறு மூன்று துளிகள் மற்றும் ஒரு மேசைக்கரண்டி அளவு தேன் சேர்த்து கலக்கவும். இதை விரலில் எடுத்து வட்டவடிவமாக சுழற்றி (circular motions) முகத்தில் பூசவும். ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

வெள்ளை ஓட்ஸூம் தக்காளியும்:

கிரவுண்ட் ஓட்ஸ் என்னும் வெள்ளை ஓட்ஸை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். ஓட்ஸ் பொடியுடன், பொடித்த சர்க்கரையை கலக்கவும். பெரிய தக்காளி பழத்தை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி துண்டை ஓட்ஸ், சர்க்கரை கலவையில் தொட்டு முகத்தில் மெதுவாக தேய்க்கவும். கழுத்து, முகம் முழுவதும் தேய்த்துவிட்டு அமர்ந்திருக்கவும். தக்காளிக்கு இயற்கையாகவே சுத்திகரிக்கும் தன்மை உண்டு. ஓட்ஸ் தோலுக்கு இதமளிக்கும்.

மேற்சொன்ன எல்லாவற்றையும் முகத்தின் நெற்றி, பாதம், முகவாய் என்ற T' வடிவ பாகத்தில் மட்டும் அதிகமாக தேய்க்கவும். முகத்தின் ஏனைய பகுதிகள் மற்றும் கழுத்தில் இதமாக தேய்க்கவும். கண்ணின் கீழ் உள்ள பகுதியில் தேய்க்க வேண்டாம்.

கை மற்றும் பாதத்திற்கு எலுமிச்சை:

ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதில் பொடித்த சர்க்கரையை தொட்டு கை மற்றும் பாதத்தில் ஐந்து நிமிட நேரத்திற்கு தேய்க்கவும். முகத்தில் உள்ள மென்மையான சருமத்திற்கு இது பாதிப்பை உருவாக்கும் என்பதால், முகத்திற்கு இதை பயன்படுத்தக்கூடாது. கை மற்றும் பாதத்தில் தேய்த்து பின் ஐந்து நிமிடங்கள் விட்டு விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

More News >>