நயன்தாரா காணாமல் போனால்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? உயர்நீதிமன்றம் காட்டம்

நயன்தாரா போன்ற பிரபல நடிகைகள் காணாமல் போனால்தான், கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபடுவார்களா? சாதாரண பெண் காணாமல் போனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சேலத்தை சேர்ந்த மஹேஸ்வரி என்பவரின் 19 வயது மகள் காணாமல் போனதாக திருச்செங்கோடு காவல் நிலையத்தில் பிப்ரவரி மாதம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த இளம் பெண்ணை கண்டுபிடித்து மீட்பதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு(ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது இன்று விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘ புகார் கொடுத்து நான்கு மாதங்கள் ஆகியும் ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. நயன்தாரா போன்ற பிரபலமான நடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? சாதாரண மக்கள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்காதா?.

அரசு ஊழியர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு வேலையை சரியாக செய்ய வேண்டும். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் காணாமல் போய்விட்டால் இப்படித்தான் அலட்சியம் காட்டுவீர்களா? ’’ என கேள்வி எழுப்பினர்.

பின்னர், காணாமல் போன இளம் பெண்ணை கண்டுபிடிக்க போலீஸ்தரப்பி்ல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் 17ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தனர்.

More News >>