விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம்.. 13 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு
அருணாச்சலப் பிரதேசத்தில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3-ந்தேதி நண்பகலில் இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம் காணாமல் போனது. காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க விமானப்படை விமானங்கள், ராணுவம், மலைவாழ் மக்கள் உதவியுடன் ஒரு வாரமாக தேடும்பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் சிக்கல் ஏற்பட்டது. விமானம் நொறுங்கி மலைப் பகுதியில் விழுந்திருக்கலாம் என்பதால், துப்பு கொடுத்தால் ரூ 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒரு வழியாக விமானம் காணாமல் போய் 8 நாட்களுக்குப் பிறகு அருணாச்சலப்பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் மலைப் பகுதி கிராமம் ஒன்றின் அருகே சிதைந்த நிலையில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் விமானத்தின் சிதறல்கள் கிடந்த பகுதிக்கு செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. ஒரு வழியாக அந்தப் பகுதிக்கு மீட்புப் படையினர் சென்றடைந்தனர். விமானத்தில் பயணித்தவர்களில் யாரும் உயிருடன் இருக்கிறார்களா? 13 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
மலைப் பகுதியில் தீவிர தேடுதலுக்குப் பின் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்தனர். இதையடுத்து விபத்துக்குள்ளான ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்து உள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.