பாக்யராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு?
நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு விஜயகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதாக அந்த அணியினர் கூறியுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதியன்று, அடையாறு எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிடுகிறது.
பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியினர், இன்று(ஜூன்13) நடிகரும், தே.மு.தி.க. கட்சித் தலைவருமான விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர். பாக்யராஜுடன் ஐசரி கணேஷ், உதயா, பிரசாந்த், குட்டி பத்மினி உள்ளிட்டோர் சென்று சந்தித்தனர். விஜயகாந்தை சந்தித்த அவர்கள் நடிகர் சங்க தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்பின்னர், பாக்யராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எங்கள் அணிக்கு ஆதரவு தருவதாகவும், எங்கள் அணியே வெற்றி பெறும் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்’’ என்றார். நாடக நடிகர்கள் பணத்திற்காக ஓட்டு போடுவார்கள் என்று நீங்கள் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு நான் அப்படி சொல்லவே இல்லை என்று பாக்யராஜ் மறுத்தார்.