எல்பிஜி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் : வரும் 12ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிப்பு

நாமக்கல்: மத்திய அரசை கண்டித்து வரும் 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு, எல்பிஜி டேங்கர் லாரிகளை இதுவரை மண்டல வாரியாக டெண்டர் நடத்தி எடுத்து வந்தது. ஆனால், இனி மண்டல வாரியாக அல்லாமல், மாநிலங்களில் புதியதாக டெண்டர் நடத்தப்படும் எனவும், இதில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.

இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெறவில்லை என்றால் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தப்படும் எனவும் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.மத்திய அரசு இந்த பிரச்னையில் இதுவரையில் செவிசாய்க்காத நிலையில் இன்று தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மத்திய அரசின் புதிய டெண்டர் முறையை கைவிட வேண்டும் எனவும், இதற்கு முன்தைய முறையையே இனியும் தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 12ம் தேதி முதல் போராட்டம் நடப்பதால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கருதப்படுகிறது.

More News >>