கோவா கடலில் தத்தளித்த ராணுவ அதிகாரி... ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு
கோவாவில் உயரமான பாறையில் இருந்து கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென தவறி விழுந்தார். மோசமான வானிலையால் சீற்றமாக காணப்பட்ட அலையில் கடலுக்குள் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்ட அவரை, பத்தே நிமிடங்களில் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் உயிருடன் மீட்ட அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சுற்றுலாவுக்கும், பொழுதுபோக்குக்கும், உல்லாசத்துக்கும் பெயர் போன இடம் தான் கோவா. ஆங்காங்கே உயரமான பாறைகள், முகடுகளுடன் அழகிய நீண்ட கடற்கரை கொண்ட கோவாவில் கடலில் குளித்து மகிழ்வதும், கடல் நீரில் வீரதீர சாகச விளையாட்டுக்கள் விளையாடுவதும் சகஜமான ஒன்று.ஆனால் ஜுன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை கோவாவில் மோசமான வானிலை நிலவும் என்பதால் கடலில் குளிக்கவோ, வீர சாகசங்களில் ஈடுபட வோ, பாறைகளில் ஏறி கடலின் அழகை ரசிக்கவோ தடை விதிக்கப்படும். இப்போதும் கடந்த 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டு, கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த தடையையெல்லாம் மீறி சிலர் கடலில் குளிப்பதும், கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. புனேவில் ராணுவ அதிகாரியாக பணியாற்றும் 26 வயதான ஒருவர், (பெயர் வெளியிடப்படவில்லை), தெற்கு கோவா கடற் பகுதியில் உயரமான பாறை ஒன்றில் நின்று கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது மழையும், காற்றும் பலமாக இருந்ததால் நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்து விட்டார்.
அப்போது கடல் அலையும் சீற்றமாக இருந்ததால் கடலுக்குள் 2 கி.மீ.வரை இழுத்துச் செல்லப்பட்டார். நல்ல வேளையாக அந்த அதிகாரி கடலில் விழுந்ததையும், அலையில் அடித்துச் செல்லப்பட்டதையும் கண்காணிப்பில் இருந்த ரோந்துப் படையினர் பார்த்து பதறி விட்டனர். ராணுவ அதிகாரி கடலில் தத்தளிப்பு என்று தெரிந்ததும் உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்க கடற்படையின் மீட்பு ஹெலிகாப்டர் வானில் பறந்து சென்றது. கடலில் இழுத்துச் செல்லப்பட்டு 2 கி.மீ.தூத்தில் உயிருக்கு போராடி தத்தளித்த வரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
அந்த அதிகாரி விழுந்த இடம் சரியாக தெரிய வந்ததால் இந்த மீட்பு ஆபரேசன் பத்தே நிமிடங்களில் முடிந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த மீட்பு பணி குறித்து வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். கோவாவில் மோசமான வானிலையால் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 4 பேர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி - தவான் திடீர் விலகல்