ரயில்வே அலுவலகத்தில் தமிழ் பேசுவதற்கு தடையா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு
ரயில்வே துறையில் கோட்டக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கும், ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான அனைத்து தகவல் பரிமாற்றமும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இடம் பெற வேண்டும் என்று திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரயில்வே துறை அதிகாரிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தேசியக் கல்விக் கொள்கையின் வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை மக்கள் எதிர்த்து வந்திருக்கிறார்கள். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி, இந்தியை கட்டாயமாக்க முயற்சி செய்தார். அப்போதே அதற்கு தமிழறிஞர்கள் மற்றும் நீதிக்கட்சித் தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு, நேரு காலத்தில் இந்தியை திணிக்க மாட்டோம் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இதனால், மத்திய அரசின் மும்மொழித் திட்டத்தை இந்தி திணிப்பாக கருதி, திராவிடக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மத்திய அரசு உடனடியாக அதை வாபஸ் பெற்று விட்டது. இந்நிலையில், ரயில்வே துறையில் தமிழுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெற்கு ரயில்வேயில், தலைமை போக்குவரத்து திட்ட அலுவலர் கடந்த வாரம் அனைத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கும், ரயில் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர், ‘‘கோட்டக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கும், ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இடையே அனைத்து தகவல் தொடர்பும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் தமிழ் மொழிக்கு தடை என்றும் தெரிவித்திருந்தனர் . மாநில மொழிகளில் தகவல் தொடர்பு செய்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல் தொடர்பு மேற்கொள்ளுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
இது பற்றி, ரயில் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘ சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 2 ரயில்கள் ஒரே பாதையில் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ரயில் நிலைய அதிகாரிகளுக்கும், கோட்டக் கட்டுப்பாட்டு அலுவலக ஊழியர்களுக்கும் இடையே மொழிப் பிரச்னையால் சரியான தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் போனதுதான் அந்த சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்தது. அதனால்தான், இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
ஆனால், இது போன்ற சம்பவங்கள் முன்பு நிகழ்ந்ததில்லை. காரணம், வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்கள் சில மாதங்களிலேயே தமிழ் கற்றுக் கொண்டு விடுவார்கள். அவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்ற விதியும் இருந்தது. அதே போல், தலைமை அலுவலகங்களுக்கு ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது ஆங்கிலம் இல்லாமல் இந்தியிலேயே எல்லா தகவல் தொடர்புகளும் இருக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் விரும்புவதாக தெரிகிறது. அதற்கு பல அதிகாரிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்’’ என்றார்.
தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்..! கேரளாவில் நடந்த நெகிழ்வான நிகழ்வு..!