தவறாக சுற்றறிக்கை வெளியாகி விட்டதாம் தமிழுக்கு எதிரான ரயில்வே உத்தரவு ஒரே நாளில் வாபஸ்
தமிழகத்தில் உள்ள ரயில் நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.தமிழில் பேசக்கூடாது என்ற திடீர் அறிவிப்புக்கு, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை ஒரே நாளில் வாபஸ் பெறுவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவித்துள்ளார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மதுரை திருமங்கலத்தில் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குளறுபடிக்கு கட்டுப்பாட்டு அறைகளில் இருந்த இரண்டு ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட தென்னக ரயில்வே மொழி பிரச்சினை காரணம் என கூறப்பட்டது.திருமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரியும், அடுத்த ரயில் நிலையமான கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரியும் பரிமாறிக் கொண்ட தகவல்கள், மொழிப் பிரச்னையால் இந்தத் தவறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனால் இரண்டு அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் நேற்று அனுப்பப்பட்டது. இதில், கோட்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்பு கொள்ளும் போது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும், பிராந்திய மொழிகளில் பேசும் போது புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.நிலைய அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளி்ல் பேசுவதை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் நிலைய அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை பற்றிய வெளியானவுடன் இன்று காலை முதலே தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழ் உணர்வை சீண்டிப் பார்க்கிறார்கள். இந்த உத்தரவுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், திமுக சார்பில் உடனடியாக போராட்டம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார்.
இதையடுத்து இன்று பிற்பகல் மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன், தெற்கு ரயில்வே பொது மேலாளரைச் சந்தித்து மனு அளித்தார். மேலும், அலுவலகத்தின் முன் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் வகையிலாவது இந்தியை திணித்துவிடலாம் என்று மத்திய அரசு பல்லாண்டுகளாக பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு பார்க்கிறது. ஆனால் அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே பெரும் எதிர்ப்பு கிளம்பி தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் உருவாகி விடுவது வாடிக்கை. அந்த வகையில் தான், தமிழுக்கு தடை போட்டு ரயில்வே அனுப்பிய ஒரு சுற்றறிக்கையும் ஒரே நாளில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மைனாரிட்டி மாணவர்கள் 5 கோடி பேருக்கு கல்வி உதவித் தொகை..!