ஒரே வீட்டில் இரு அந்நியர்: மன விலக்கத்தில் தம்பதியர்
ஒரே வீட்டில் குளித்து, சாப்பிட்டு, உறங்கியும் பேசிக்கொள்ளாமல் இருந்தால் அது திருமண வாழ்க்கையாகுமா? "நாங்க ஒரே வீட்லதான் இருக்கோம்... ஆனால்..." என்று கூறும் தம்பதியரின் எண்ணிக்கை பெருகிவிட்டது. தம்பதியருக்குள் உணர்வுப்பூர்வமான இணைப்பு இல்லாமல் ஒன்றாக தங்கியிருக்கின்றனர். 'வாழ்கின்றனர்' என்ற கூறிட இயலாத அளவுக்கு நெருக்கமில்லாத வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
'உடம்பு இங்கே இருக்கு; மனசு எங்கே இருக்கு?' என்று கேட்குமளவுக்கு இணையில் ஒருவர் பட்டும்படாமலும் நடந்து கொள்ளும் நிலை இது. இந்நிலையை எளிதாக அடையாளங்காண இயலாது. 'ஒருவேளை அவரது இயல்பே அப்படித்தானோ?' என்று எண்ணக்கூடிய தோற்றப்பிழை ஏற்படும்.
பெரும்பாலும் ஆண்களே உணர்வுப்பூர்வமான பிரிதலால் பாதிக்கப்படுவர். பெண்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படக்கூடும். தினசரி வேலைகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது, நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது, வாழ்க்கைத் துணையுடன் உரையாடலை தவிர்ப்பது, பொறுப்புகளை நிறைவேற்ற சாக்குப்போக்கு சொல்வது, இணையுடன் நெருக்கத்தை தவிர்ப்பது ஆகியவை மனவிலக்கத்தின் அறிகுறிகளாகும்.
அறிகுறிகளும் விளக்கமும்
பொறுப்பற்ற தன்மை: மன விலக்கமுறும் பெண்கள், அன்றாட வேலைகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் அக்கறையில்லாமல் இருப்பார்கள். ஆண்கள், நெருக்கடியான நேரங்களில் அல்லது முக்கியமான தருணங்களில் விலகி விடுவர். பொதுவாக இணைக்கு தங்கள் துணை தேவைப்படும் நேரங்களில் உடன் இருக்கமாட்டார்கள்.
வெளிப்படுத்தாமை: மனவிலக்கம் கொண்டவர்கள், தங்கள் எண்ணங்களை, உணர்வுகளை வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். தங்கள் தனிப்பட்ட விஷயங்களை கருத்து பரிமாற்றம் செய்யவோ, உரையாடலை ஆரம்பிக்கவோ மாட்டார்கள். வாழ்க்கை துணையுடன் அன்பை வெளிப்படுத்தவோ, அவர்களை பாராட்டவோ நேரம் இல்லை என்று காட்டும் வண்ணம் பரபரப்பாக இருப்பதாக காட்டிக்கொள்வார்கள்.
குற்றப்படுத்துதல்: கணவன், மனைவியிடம் மனவிலக்கம் கொண்டால், மாமியார் ஸ்தானத்தை தான் ஏற்றுக்கொண்டதுபோல் எப்போதும் குறைகூறிக்கொண்டே இருப்பார். மனைவி, கணவரிடமிருந்து உணர்வுரீதியாக விலகினால் கணவரின் தோற்றம், வேலை, பழக்கவழக்கம் ஆகியவற்றை குறைகூறி, தனக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என்பது போன்று பேசுவார்.
நேரம்: நண்பர்கள், வேலை, பார்ட்டிகள், விழாக்கள், பயணங்கள் எல்லாவற்றுக்கும் நேரம் செலவழிப்பவர்கள், கணவருக்கு / மனைவிக்கு நேரம் ஒதுக்கமாட்டார்கள். விரைவிலேயே நேரம் செலவழிக்கிறேன் என்று கூறக்கூடும். ஆனால், மாற்றம் வரவே வராது.நெருக்கம்: உணர்வுப் பூர்வமான விலக்கத்தில் ஆரம்பித்து உடல்ரீதியான விலக்கத்தில் போய் நிற்கும். பொதுவாக, கணவர் தன்னிடமிருந்து உணர்வுரீதியாக விலகுவதாக உணர்ந்தால், பெண்கள் உடல்ரீதியான நெருக்கத்தை தவிர்க்கின்றனர். தம்பதியரிடையே உடல்ரீதியான நெருக்கம் இல்லாதபட்சத்தில் மண உறவே ஆபத்துக்குள்ளாகும்.
பொதுவாக, காதலிக்கும்போது இல்லையென்றால் பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்யும்போது தெரியாத உண்மைகள், இல்லறத்தை ஆரம்பிக்கும்போது தெரிய வரும். நெருங்கி வாழ ஆரம்பிக்கும்போது கணவருக்குள் / மனைவிக்குள் இருக்கும் 'உண்மை நபர்' வெளிப்பட ஆரம்பிப்பார்.
'இவள் எனக்கானவளல்ல' என்ற உணர்வு மேலோங்கும். சில தம்பதியருக்குள், கடந்த கால வாழ்க்கை பற்றிய பேச்சு பிரச்னைக்கு காரணமாகிவிடும். பல நேரங்களில், கணவரோ, மனைவியோ மற்றவரிடம் தங்களை பற்றி ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்வர். அதற்காக செய்யும் செயல்களால் வாழ்க்கைத் துணையின் நம்பிக்கையை இழக்க நேரிடும். தற்போது சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரமும் மனவிலக்கத்திற்குக் காரணமாகிறது.
நீங்களோ, உங்கள் வாழ்க்கைத் துணையோ மனவிலக்க நிலையில் இருந்தால் புரிந்துகொள்ளுங்கள்; உங்கள் வாழ்க்கைத் துணை பாதிக்கப்பட்டிருந்தாலும் நீங்களாக முயற்சியெடுங்கள்; இருவரும் சேர்ந்து அந்த பிரச்னையை தீர்த்து இனிய இல்லறத்தை நடத்துங்கள்.
நயன்தாரா காணாமல் போனால்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? உயர்நீதிமன்றம் காட்டம்