மறந்துடாதீங்க மாணவர்கேள.. நீட் தேர்வுக்கும் ஆதார் கட்டாயம்..

புதுடெல்லி: வரும் மே 6ம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கும் மாணவர்கள் கட்டாயமாக ஆதார் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு வரும் மே 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் என தற்போது கூறப்பட்டுள்ளது.

வங்கி, காஸ் சிலிண்டர் தொடங்கி ஓட்டுநர் உரிமத்தில் ஆதார் எண்ணை இணைப்பதை தொடர்ந்து தற்போது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களும் கட்டாயமாக ஆதார் எண் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் 6ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியாகின.அதில், ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள், அவரது விண்ணப்பப் படிவத்தில் தனது ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினத்தை கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆதார் அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள், ஆதார் சட்டம் பிரிவு 3ன் படி, ஆதார் அட்டை சேர்க்கை மையத்திற்கு சென்று ஆதார் பெற்ற பிறகு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீர், மேகாலயா ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநில மாணவர்கள் ஆதார் விவரங்களை கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் என்ஆர்ஐக்கள் அவர்களது பாஸ்போர்ட் அல்லது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன், ஆதார் விவரங்கள், மாணவர்களின் விவரங்களோடு பொருந்தவில்லை என்றால் 2018ம் ஆண்டிற்கான நீர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களின் பள்ளிச்சான்றிதழில் கொடுத்திருக்கும் விவரங்கள் ஒத்துப்போகும்படியே தனது விவரங்களை வைத்திருக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

More News >>