அடுத்து என்ன செய்வது? டி.டி.வி. திடீர் ஆலோசனை

தேர்தல் தோல்விக்கு பின்பு, அ.ம.மு.க. கட்சியினர் பலரும் அ.தி.மு.க.வில் இணைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் டி.டி.வி.தினகரன் நாளை(ஜூன் 15) ஆலோசனை நடத்துகிறார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. 37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. ஒரேயொரு தொகுதியாக தேனியில் மட்டும் வென்றது. வேலூரில் தேர்தல் இன்னும் நடக்கவில்லை. இதற்கிடையே, 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 9 தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைத்து கொண்டது. ஆனால், அ.தி.மு.க.வை மீட்பேன் என்று முழக்கமிட்ட டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

இந்நிலையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.ம.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதில் அ.தி.மு.க.வினர் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்களே நேரடியாக தொடர்பு கொண்டு அ.ம.மு.க.வினரை இழுத்து வருகின்றனர். நெல்லை தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன், மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா உள்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இதைத் தொடர்ந்து, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் தோல்வி குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கடந்த 1ம் தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது, தன்னை நம்பியிருப்பவர்கள் மட்டும் கட்சியில் இருக்கலாம். வேறு கட்சிக்கு போக நினைப்பவர்கள் போகலாம் என்று கூறியதாக தெரிகிறது. மேலும், எப்படியும் அ.தி.மு.க. ஆட்சி தானாக கவிழ்ந்து விடும் என்றும் அது வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

இதன்பின்பும், அ.ம.மு.க.வில் விருதுநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முதலமைச்சர் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் இன்று(ஜூன் 14) முதலமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது. அவரது வீட்டில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாமா அல்லது தேர்தலை புறக்கணிப்பதா, மாநிலம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் அ.தி.மு.க. அரசின் தோல்விகள் குறித்து பிரச்சாரம் செய்வது போன்றவை குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

தமிழக அரசியல் குழப்பம்.. ஆளுநர் பன்வாரிலால் திடீர் டெல்லி பயணம் ஏன்?
More News >>