துணை சபாநாயகர் பதவி கேட்கவி்ல்லை: யூகங்களுக்கு ஜெகன் முற்றுப்புள்ளி

மக்களவை துணை சபாநாயகர் பதவியை எங்கள் கட்சிக்கு தருமாறு பிரதமரிடமோ, அமித்ஷாவிடமோ கேட்கவில்லை என்று ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியை வீழ்த்தி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. சட்டசபையில் 151 இடங்களை பிடித்தது மட்டுமின்றி, மக்களவைத் தேர்தலிலும் 22 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி 2வது முறை பதவியேற்பு மற்றும் முதலாவது முதலமைச்சராக ஆந்திர மாநில முதலமைச்சரான ஜெகனுக்குத்தான் அப்பாயின்ட்மெண்ட் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை முதலமைச்சர் ஜெகன் மோகன் வரவேற்றார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல் பேசிக் கொண்டனர். ஆந்திராவுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி பேட்டியும் அளித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்பு, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடம் பெறும் என்றும், கடந்த முறை மக்களவை துணை சபாநாயகர் பதவி, அ.தி.மு.க.வின் தம்பிதுரைக்கு அளித்தது போல் இந்த முறை ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வழங்கப்படும் என்று பேச்சுகள் எழுந்தன.

இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லி சென்றுள்ளார். அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன்பின்பு, ஜெகன் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவே வந்துள்ளேன். அதைத் தவிர, நீங்களாக எதுவும் யூகம் செய்யாதீர்கள். எங்கள் கட்சிக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி தருவதாக அவர்களும் சொல்லவும் இல்லை. நாங்களும் கேட்கவில்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும். ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின்படி எங்கள் மாநிலத்திற்கு அளிக்க வேண்டிய நிதிகளை தர வேண்டுமென்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

பாக். வான்வெளி வழியே பிரதமர் மோடி விமானம் பறக்காது - இந்தியா திடீர் முடிவு
More News >>