விட்டு..விட்டு..மிரட்டுது மழை... இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி என்னவாகும்?

உலகக் கோப்பை கிரிக்கெட்டில், பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால் மழையின் மிரட்டலால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளதால் ரசிகர்களிடையே கவலை தொற்றிக் கொண்டுள்ளது.

 

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களிடையே பரபரப்பும், பதற்றமும் தொற்றிக் கொள்வது வாடிக்கையானதே. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று இந்த இரு அணிகளும் களம் காண உள்ளன. இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கடந்த பல ஆண்டுகளாக இருநாட்டு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டியும் அபூர்வமாகி விட்டது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஆசிய கோப்பையில் மோதின. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன் பின் 9 மாத இடைவெளிக்குப் பின் உலகக் கோப்பை தொடரில் இன்று களத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றாலே இந்தியாவுக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி தான். ஏனெனில் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் மோதிய 6 ஆட்டங்களையும் இந்தியாவே வென்று லட்டு போல லவட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய போட்டியிலும் இந்தியா வென்று சாதிக்கும் என்று இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த பரபரப்பான போட்டிக்கான டிக்கெட்களும் அமோகமாக விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்நிலையில் போட்டி நடைபெற உள்ள மான்செஸ்டரில் வானிலை நிலவரம் தான் கலவரமாக உள்ளது. கடந்த சில நாட்களாகவே அடிக்கடி பெய்து வருகிறது. நேற்று பகலில் தூறல் நின்று சூரியன் லேசாக எட்டிப் பார்க்க, நிம்மதி அடைந்த இந்திய அணி வீரர்கள் சுறுசுறுப்பாக பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாலையில் மீண்டும் மழையின் மிரட்டல் ஆரம்பித்து விட்டு விட்டு பெய்தது. இதனால் மைதானத்தில் தண்ணீர் தேங்காமலும், ஆடுகளம் சேதமாகாமல் இருக்கவும், பணியாளர்கள் இரவு முழுவதும் துரிதமாக செயல்பட்டனர்.

இன்றைய வானிலையைப் பொறுத்தவரை 60% மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் முதல்பாதியில் மழை பாதிப்பு அவ்வளவாக இருக்காது என்றும் இரண்டாவது பாதியில் மழையின் குறுக்கீடு அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை நிலவரம் கூறுகிறது. இதனால் போட்டி முழுமையாக நடக்காது என்றாலும், ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டியின் முடிவு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டியின் முடிவை யாருக்கு சாதகமாக மழையும் நிர்ணயிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

சச்சினுக்கு அல்வா கொடுத்த ஆஸ்திரேலியா நிறுவனம் ... ரூ 15 கோடி கேட்டு வழக்கு

More News >>