எடப்பாடி ஆட்சி கவிழாது தங்கத்தமிழ்செல்வன் பேட்டி
இன்னும் 2 ஆண்டுகளுக்கு எடப்பாடி ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்று தங்கத்தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளரான தங்கத்தமிழ்ச் செல்வன், தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். அ.ம.மு.க. தோல்விக்குப் பின், அந்த கட்சிப் பிரமுகர்கள் பலரும் அ.தி.மு.க.வுக்கு தாவினர். தங்கத்தமிழ்ச் செல்வனும் அ.தி.மு.க.வில் சேரப் போவதாக தகவல் பரவியது.
இந்நிலையில், தங்கத்தமிழ்ச் செல்வன் இன்று(ஜூன்16) ஹலோ எப்.எம்.மில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இது எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மக்களைப் பொறுத்தவரை, அ.தி.மு.க அல்லது தி.மு.க. என்றுதான் ஆதரித்து வருகிறார்கள். தி.மு.க.வுக்கு மாற்று என்றால் அது அ.தி.மு.க.தான் என மக்கள் நினைக்கிறார்கள். அதே சமயம், இப்போதுள்ள அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திச் சென்ற உண்மையான அ.தி.மு.க.வாக இல்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
அதனால், அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. எதிர்காலத்தில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதுதான் எங்கள் நோக்கமாக இருக்கும். தற்போது எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை உள்ளதால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால், அதற்குப் பின்பு உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.
இவ்வாறு தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
தனிக்கட்சியா, மீண்டும் இணைப்பா... தினகரன் கட்சியினர் மனநிலை என்ன?