28 ஆண்டுக்கு பின் மன்மோகன் சிங் இல்லாத ராஜ்யசபா .... மீண்டும் எம்.பி. ஆவாரா?

28 ஆண்டுகளாக தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

சிறந்த பொருளாதார மேதை என்ற பெயர் பெற்ற மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் பதவி வகித்தவர். 1991-ம் ஆண்டில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்தியில் பதவி ஏற்றது. அப்போது அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் பிரதமர் நரசிம்மராவ்.

நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்த போது, மன்மோகன் சிங் கொண்டு வந்த பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைள் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என இவர் கொண்டு வந்த நடவடிக்கைகள் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், பொருளாதாரத்தில் இந்தியாவை உலக நாடுகளுடன் போட்டி போடச் செய்து நல்ல பலனைக் கொடுத்தது.

1991-ல் நிதியமைச்சராக பொறுப்பேற்ற மன்மோகன் சிங், அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்தவருக்கு, அசாமில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்குவதா ? என்ற சர்ச்சையும் அப்போது எழுந்தது. இதனால் தனது முகவரி, வாக்காளர் அட்டை என அனைத்தையுமே அசாமுக்கு மாற்றினார் மன்மோகன் சிங் .இதன் பின் 1991 முதல் அசாமிலிருந்தே தொடர்ந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகி 28 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்தார். இந்தக் காலக் கட்டத்தில் நரசிம்மராவ் அமைச்சரவையில் 5 ஆண்டுகள் நிதியமைச்சர், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் 6 ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்த மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தார்.

கடைசியாக 2013-ல் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வான மன்மோகனின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்து விட்டது. மீண்டும் அசாமில் இருந்து அவரை எம்.பி.யாக தேர்வு செய்ய முடியாத நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரசின் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 43 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரசின் பலம் வெறும் 25 தான் என்பதால் மன்மோகன் எம்.பி.யாக தேர்வாக முடியாது.

இதனால் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள வேறு மாநிலங்களில் இருந்தாவது மன்மோகனை ராஜ்யசபா எம்.பி.யாக்க முடியுமா? என்று பார்த்தால் அங்கும் சிக்கல் தான். ஏனெனில் ராஜஸ்தான், பஞ்சாப், ம.பி, சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய காங். ஆளும் மாநிலங்களில் இம்முறை ஒரு ராஜ்யசபா இடம் கூட காலியாக இல்லை. இதனால் அடுத்த மாதம் தமிழகத்தில் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் 3 இடங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும்.அதில் ஒரு எம்.பி. இடத்தை மன்மோகன் சிங்குக்காக கேட்டுப் பெற காங்கிரஸ் மேலிடம் முயற்சிக்கலாம் என தெரிகிறது. ஆனால் ஏற்கனவே மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக உறுதியளித்துள்ள நிலையில், மேலும் ஒரு இடத்தை காங்கிரசுக்காக திமுக தாரை வார்க்குமா ?என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் மத்தியில் புதிய அமைச்சரவை பதவியேற்ற பின், முதன் முறையாக மக்களவை நாளை கூடு கிறது. எம்.பி.க்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் முடிந்த பின், 20-ந் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். பதவிக் காலம் முடிவடைந்ததால், 28 ஆண்டுகளாக ராஜ்யசபாவில் தொடர்ந்து எம்.பி.யாக அமைதியின் மொத்த உருவமாக திகழ்ந்த மன்மோகன் சிங், இந்தக் கூட்டத்தொடரில் இடம் பெறாவிட்டாலும் மீண்டும் எம்.பி.யாக தேர்வாக வாய்ப்பு கிடைக்குமா? என்பது தான் இப்போது டெல்லியில் பேச்சாக உள்ளது.

More News >>