டிரைவரின் அஜாக்கிரதை... பேருந்தில் சடலம் ... துபையில் 6 வயது கேரள சிறுவனின் சோக முடிவு

துபையில் பள்ளிக்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன், டிரைவரின் அஜாக்கிரதையால் பள்ளிப் பேருந்திலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் பிற சிறுவர்களை இறக்கிவிட்டு பேருந்திலேயே தூங்கிவிட்ட சிறுவனை கவனிக்காது, வாகனத்தின் கதவுகளை மூடிவிட்டு பல மணி நேரம் ஓரம் கட்டியதால் இந்த சோகம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அரபு நாடான துபையின் அல்குவாஷ் பகுதியில் வசிக்கும் ஒரு கேரள தம்பதியினரின் 6 வயது மகன் முகம்மது பர்ஹான் .அங்குள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் படித்து வந்தான். நேற்று காலை பள்ளி செல்ல பள்ளிப் பேருந்தில் ஏறிய சிறுவன் தூங்கி விட்டானாம். பள்ளி சென்றவுடன் பேருந்திலிருந்து மற்ற மாணவர்கள் அனைவரும் இறங்கியுள்ளனர்.

 

பேருந்துக்குள்ளேயே தூங்கிக் கொண்டிடுத்த சிறுவனை கவனிக்காத டிரைவர் பேருந்தை ஓரம் கட்டிவிட்டு கதவுகளை கதவுகளையும் மூடிவிட்டுச் சென்று விட்டாராம்.

காலையிலிருந்து மாலை பேருந்துக்குள்ளேயே மாட்டிக் கொண்ட சிறுவன், 7 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாகத் தான் மீட்கப்பட்டான். டிரைவரின் அஜாக்கிரதையால் கேரள சிறுவனுக்கு நேர்ந்த இந்த சோக சம்பவம் துபையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். சிறுவன் இறந்தது எப்படி என்பது குறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் சாவுக்கு பேருந்து டிரைவரின் அஜாக்கிரதை தான் காரணம் என்று தெரிய வந்தால் கடும் தண்டனை உறுதி என்று கூறப்படுகிறது.

ஏனெனில் கடும் சட்டத் திட்டங்கள் அமலில் உள்ள துபையில் இதுபோன்ற சம்பவங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படுவது வழக்கம். ஏற்கனவே 2014-ல் இதே போன்ற ஒரு துயர சம்பவம் நடந்து 5 வயது பள்ளிச் சிறுவன் உயிரிழந்தான். அப்போது அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 1 லட்சம் திர்ஹாம் வழங்கவும் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More News >>