ஓட்டு இருந்தும் ஜெயிக்க முடியாது பாவம் காங்கிரஸ்
குஜராத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் போதிய வாக்குகள் இருந்தும் காங்கிரஸ் கட்சியால் ஒரு எம்.பி. இடத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ராஜ்யசபா தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் முன்னுரிமை வாக்குகளின் அடிப்படையில் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தற்போது குஜராத்தில் 2 இடங்கள், ஒடிசாவில் 3 இடங்கள், பீகாரில் ஒரு இடம் என்று 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தேர்தல் ஜூலை 5ம் தேதி நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அமித்ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர், லோக்சபா தேர்தலில் முறையே காந்திநகர், அமேதி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், காலியான 2 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்குத்தான் தற்போது ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. எளிதில் ஒரு இடம் வெற்றி பெறும். இன்னொரு இடத்தை வெல்வதற்கு காங்கிரசுக்கு வாய்ப்பு இருந்தது.
ஆனால், அந்த வாய்ப்பை தேர்தல் ஆணையம் பின்பற்றும் நடைமுறை காலி செய்கிறது. என்னது, தேர்தல் ஆணையம் இன்னுமா பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று நீங்கள் சந்தேகமாக கேட்கலாம! ஆனால், உண்மையிலேயே அப்படியொரு சந்தேகம் எல்லோருக்குமே ஏற்படும். அப்படியென்ன நடைமுறை?
ராஜ்யசபா தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் முன்னுரிமை வாக்குகளின் அடிப்படையில் எம்.பி. தேர்வு செய்யப்படுகிறார். அதாவது, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் முதல் வாக்கு, இரண்டாம் வாக்கு என்று வேட்பாளர்களுக்கு அளிப்பார்கள். முதல் வாக்குகளை எண்ணும் போது, ஒருவர் மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்று விட்டால், அவர் வெற்றி பெற்றவராகி விடுவார். ஆனால், அப்படியில்லாத பட்சத்தில் இரண்டாம் வாக்குகள் எண்ணப்பட்டு அதிலுமாக சேர்த்து அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.
தற்போது குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 71 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். எனவே, ஒரே சமயத்தில் 2 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்பட்சத்தில் இரு கட்சிகளும் முதல் வாக்குகளின் அடிப்படையில் தலா ஒரு இடத்தை வென்று விடும். அதாவது, ஒரு எம்.பி.க்கு குறைந்தபட்சம் 62 முதல் வாக்குகள் கிடைக்க வேண்டும்.
ஆனால், தேர்தல் ஆணையம் இரண்டு இடங்களுக்கான தேர்தலையும் தனித்தனியே நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இரண்டு தேர்தலிலும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கே அதிகமான முதல் வாக்குகள் கிடைக்கும் என்பதால், அவர்களே வெற்றி பெறுவார்கள்.
இப்படி தேர்தல் நடத்துவதற்கு, கடந்த 1994, 2009ம் ஆண்டுகளில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை காரணமாக தேர்தல் ஆணையம் சொல்கிறது. அதாவது, ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு ராஜ்யசபா இடம் காலியாகி இருக்கும். இன்னொரு இடம் இன்று காலியாகி இருக்கும். இரண்டுக்கும் ஒரே தேர்தலாக நடத்தக் கூடாது. ஏனென்றால், ராஜ்யசபா எம்.பி. பதவியும் குறிப்பிட்ட 6 வருட பதவியாகும். அதாவது, ஒருவர் 2 வருடங்களில் இறந்து விட்டால், அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்படும் எம்.பி. மீதி 4 வருடங்களுக்குத்தான் பதவி வகிக்க முடியும். அதனால்தான், வெவ்வேறு காலகட்டத்தில் காலியான இடங்களுக்கு ஒரே தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்புகளில் கூறப்பட்டிருக்கிறது.
அமித்ஷாவும், ஸ்மிருதியும் ஒரே மக்களவைத் தேர்தலில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால், அமித்ஷா வெற்றியை முதல் நாளிலும், ஸ்மிருதி வெற்றியை மறுநாளும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையொட்டி, அவர்களி்ன் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளையும் அடுத்தடுத்த நாட்களில் காலியானதாக அறிவித்திருக்கிறது. வெவ்வேறு நாளில் காலியானதாக அறிவிக்கப்பட்ட காரணத்தைச் சொல்லியே, தனித்தனித் தேர்தல்களை நடத்தப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதை தேர்தல் ஆணையம் பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வயநாடு தொகுதியில் நன்றி தெரிவிக்கும் ராகுல்காந்தி - 3 நாள் பயணத்தை தொடங்கினார்