அரசு பணத்தில் ஓட்டல் சாப்பாடு பிரதமர் மனைவிக்கு அபராதம்
உணவு விடுதிகளில் சாப்பாடு வாங்கியே 97 ஆயிரம் டாலர் அரசு பணத்தை மோசடி செய்ததாக இஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மீது சில ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவை தவிர, இவரது மனைவி சாரா நேதன்யாகு மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, பிரதமரின் அரசு பங்களாவில் அரசு சமையல்காரர்கள் இருக்கும் போது, வெளியில் உணவு விடுதிகளில் உணவு வாங்கி சாப்பிட்டே அரசு பணத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்பதே அந்த குற்றச்சாட்டு. இந்த வகையில், நான்கு ஆண்டுகளில் சுமார் 97 ஆயிரம் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.65 லட்சம்) அரசு பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு, ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ஜெருசேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், வழக்கில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் நிலையில், குற்றத்தை சாரா நேதன்யாகு ஒப்புக் கொண்டார். மேலும், அங்குள்ள கிரிமினல் சட்டப்படி, கணக்கு போட்டு, 12,500 அமெரிக்க டாலர் பணத்தை அரசுக்கு திருப்பிச் செலுத்தவும், 2,800 டாலர் அபராதம் செலுத்தவும் சாரா ஒப்புக் கொண்டார். இதன்படி, அவரை குற்றவாளியாக அறிவித்து, தண்டனையாக அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மோடி அமைச்சரவையில் தி.மு.க. சேருகிறதா? டி.ஆர்.பாலு விளக்கம்