17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்... புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்றும், நாளையும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர். 19 ந் தேதி புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலும் நடைபெற உள்ளது.
17-வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த மாதம் 30-ந் தேதி பதவியேற்ற நிலையில் 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களவை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள மூத்த எம்.பி.யான வீரேந்திர குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பின்னர், புதிய எம்.பி.க்களுக்கு வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இதில் முதல் 2 நாள்கள், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 542 பேரும் பதவியேற்கவுள்ளனர். 19-ந்தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதன் பின் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 20-ந்தேதி உரை நிகழ்த்தவுள்ளார்.
இதையடுத்து, கூட்டத் தொடர் ஜூலை 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜூலை 5-ந் தேதி பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். ஆதலால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் எனத் தெரிகிறது.
மக்களவைத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு தலைமை வகிக்கப் போவது யார் என்று இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களிடையே குழப்பம் நிலவுகிறது.
'மும்மொழி கொள்கை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும்'- கஸ்தூரி ரங்கன் பேட்டி