பொறியியல் படிப்பு கலந்தாய்வு தேதி மாற்றம்..! கலந்தாய்வை 5 நாட்கள் தள்ளி வைத்த அண்ணா பல்கலை
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு துவங்க இருந்த நிலையில் தரவரிசை பட்டியல் தாமதத்தின் காரணமாக 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பிஇ பிடெக் படிப்புகளில் சேருவதற்கு இந்தாண்டு ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் இன்னும் சில பேர் சான்றிதழ்களை முழுமையாக கொடுக்காத காரணத்தால் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே இன்று வெளியாக இருந்த தரவரிசை பட்டியல் வரும் 20ம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று தர்மபுரியில் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 20ஆம் தேதி தொடங்க இருந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டு 5 நாட்கள் கழித்து வரும் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 25-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வும் 26ஆம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 27ஆம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் நடைபெற உள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு பொறுத்தவரையில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்
அம்மா இருந்திருந்தால்... அமைச்சர் இப்படி பேசுவாரா?