இம்ரான்கானின் அட்வைஸை கேட்காதது ஏன்? - பாக்.கேப்டனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அட்வைஸை கேட்காததால் அணி தோல்வி அடைந்து விட்டது என்று பாக்.கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் வெடித்து சர்ச்சையாகியுள்ளது.

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு முன், பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான் ட்விட்டரில், பாகிஸ்தான் வீரர்களை ஊக்கப்படுத்தி சில அட்வைஸ்களும் கூறி பதிவிட்டிருந்தார். அதில், இந்தப் போட்டியில் இரண்டு அணிகளுக்குமே மன அழுத்தம் இருக்கும். மன வலிமை அதிகமாக இருக்கும் அணியே வெற்றி பெறும். நாம் தைரியமான கேப்டனையே கொண்டிருக்கிறோம். அவர் துணிச்சலுடன் இருக்க வேண்டும்.

மனதில் இருக்கும் பயத்தை வெளியேற்றிவிட்டு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தோற்றுவிடுவோமோ என்கிற பயமே எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடும். இதுவே பாகிஸ்தான் அணிக்கு நான் அளிக்கும் அறிவுரை என்று கூறியிருந்தார்.

மேலும், பிட்சில் ஈரப்பதம் இல்லாத நிலையில் டாஸ் வென்றால், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யுங்கள் என்றும் அட்வைஸ் கூறியிருந்தார். ஆனால், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பந்துவீச்சையே முதலில் தேர்வு செய்தார். இதனால் இந்தியா பேட்டிங்கில் தூள் கிளப்பி மளமளவென ரன்களை வாரிக் குவித்தது. உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான அதிக பட்ச ஸ்கோரை பதிவு செய்தும் இந்தியா சாதித்தது.

இரண்டாவது பாதியில் கடின இலக்கை துரத்த முடியாமலும், மழையும் சேர்ந்து சதி செய்ய பாகிஸ்தான் படுதோல்வியைத் தழுவியது.இந்தத் தோல்வியால் மனமுடைந்த பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் கோபம் இப்போது அந்த நாட்டு அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பக்கம் ஆவேசமாக திரும்பியுள்ளது. பிரதமரின் பேச்சை கேட்டு முதலில் பேட்டிங் செய்திருந்தால் ஜெயித்திருக்கலாமே? ஒரு காலத்தில் பெரிய கிரிக்கெட் ஜாம்பாவனாக திகழ்ந்த பிரதமர் இம்ரான்கானின் அட்வைஸை கேட்காதது ஏன்? என்று சமூக வலைத் தளங்களில், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று நாடு திரும்பினால் அணி வீரர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், தோல்வியுற்று திரும்பினால் கல்லால் அடிக்காத குறையாக எதிர்ப்பு காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அந்நாட்டு ரசிகர்களின் வழக்கம். இம்முறை கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்து, நாட்டின் பிரதமராகவும் உள்ள இம்ரான்கானின் அட்வைஸை புறந்தள்ளி, பரம வைரியான இந்தியாவிடம் தோற்றுள்ளனர். இதனால் கொந்தளிப்பில் உள்ள அந்நாட்டு ரசிகர்கள், பாக்.அணி வீரர்கள் தோல்வி முகத்துடன் நாடு திரும்பும்போது என்ன மாதிரி 'கவனிப்பு' நடத்தப் போகிறார்களோ? தெரியவில்லை.

விட்டு..விட்டு..மிரட்டுது மழை... இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி என்னவாகும்?
More News >>