அதிமுகவை காப்பாற்ற முன்னூறு சி பிளான் காப்பாற்றுவாரா பிரசாந்த்?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடமாக தேனியில் மட்டும் எப்படியோ வென்றது. இரட்டை இலை, ஆளும்கட்சி செல்வாக்கு, மத்திய அரசு துணை என்று எல்லாமே இருந்து அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
ஆனால், 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தட்டுத்தடுமாறி 9 இடங்களில் வெற்றி பெற்றதால், எடப்பாடி பழனிச்சாமி இன்னும் முதலமைச்சராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், தோல்வியைக் காரணம் காட்டியும், ஓ.பி.எஸ். மகன் மட்டும் வென்றதை சுட்டிக்காட்டியும், எடப்பாடிக்கு வேட்டு வைக்க ஓபிஎஸ் தரப்பு வேகமாக காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த சூழலில், தோல்வியில் துவண்டு கிடக்கும் கட்சியை தூக்கி நிறுத்த வேண்டும், கட்சிக்குள் தன் கரத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இரட்டை இலக்கோடு எடப்பாடி பிடித்திருக்கும் புளியங்கொம்புதான் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.நரேந்திர மோடி முதல் ஜெகன்மோகன் ரெட்டி வரை அரசியல் களத்தில் அரியணை ஏற பலருக்கும் உறுதுணையாக நின்றவர்தான் பிரசாந்த். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவரது ஐ-பேக் நிறுவனத்தை தமிழகத்தில் அதிமுகவிற்கு வியூகம் வகுக்க அழைத்து வந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் பிரசாந்த் கிஷோருக்கு தமிழகம் புதிதல்ல. அவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு திமுகவின் அப்போதைய செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை அணுகி திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுக்க விருப்பம் தெரிவித்தார். அப்போது, முதல்கட்டமாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் சிலரை சந்தித்து தனது வியூகங்களை விளக்கியிருக்கிறார் பிரசாந்த். ஆனால், திமுகவில் பழம் தின்று ெகாட்ைட ேபாட்ட பழுத்த தலைகள் அவ்வளவு சீக்கிரம் அடுத்த ஆளை உள்ளே விடுவார்களா? ‘இவருக்கு தமிழக களநிலவரமே தெரியவில்லை, இவர் நமக்கு பயன்பட மாட்டார்’ என ஸ்டாலினிடம் ஓங்கிச் சொல்லி விட்டதால் அந்த முயற்சி முளையிலேயே முறிந்து விட்டது.
ஆனாலும், இன்னமும் கூட திமுக தலைவரின் மருமகன் சபரீசனுடன் சுமூக உறவில்தான் இருக்கிறார் பிரசாந்த் கிஷோர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கடந்த மாதத்தில் ஒரு நாள் பிரசாந்த் கிஷோர், சபரீசனுடன் இரவு உணவுக்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுபோல் பிரசாந்த் கிஷோர் - சபரீசன் சந்திப்புகள் அடிக்கடி நடப்பது வழக்கம் என்றும் சொல்கிறார்கள்.
சபரீசனின் ஓஎம்ஜி நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் பலர், ஏற்கனவே பிரசாந்த் கிஷோருடன் பணியாற்றியவர்கள் என்றும், அந்த ஓஎம்ஜி குரூப் நபர்களுடன் பிரசாந்த்துக்கு நல்ல தொடர்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள். இப்படி திமுகவால் நிராகரிக்கப்பட்டாலும், தொடர்ந்து அந்த கட்சியுடன் வலியப்போய் நட்பு பாராட்டும் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி பழனிச்சாமி எப்படி நம்புகிறார்? இதுதான் இப்போது அமைச்சர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. அவரை நம்பி ஏன் பெரிய பொறுப்பை ஒப்படைத்தால், அவர் எதிரணிக்கு சாதகமாக போய் விட மாட்டாரா என்று அதிமுகவிற்குள்ளேயே முணுமுணுப்புகள் கேட்க ஆரம்பித்துள்ளன.
இது பற்றி, எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் ஒருவரிடம் நாம் கேட்ட போது, ‘‘ஓபிஎஸ் ஆட்கள்தான் அப்படி தேவையில்லாமல் பிரசாந்த் கிஷோர் மீது சந்தேகம் கிளப்பி பேசுகிறார்கள். அதை பெரிதா எடுத்துக்காதீங்க’’ என்கிறார்கள். பிரசாந்த் கிஷோர் நியமனத்தில் ஓபிஎஸ் தரப்பின் கருத்துகளை கேட்காமலே எடப்பாடி முடிவெடுத்ததால் அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்றும் தெரிவித்தனர். கட்சியை வலுப்படுத்துவதை விட தன்னுடைய தலைமையை வலுப்படுத்துவதற்குதான் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி அழைத்து வந்திருப்பதாக ஓபிஎஸ் தரப்பில் பலமாக கிசுகிசுக்கப்படுகிறது.
எடப்பாடிக்கும் முன்பே பிரசாந்த் கிஷோரை தேர்தல் வேலைக்கு பயன்படுத்திப் பார்த்து விட்டார் நம்மவர் கமலஹாசன். கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியவர் பி.கே. எனும் இந்த பிரசாந்த் கிஷோர்தான். ஆனாலும் பெரிய ரிசல்ட் கிடைக்கவில்லை என்பதில் நம்மவருக்கு வருத்தம்தானாம். அதெல்லாம் சரி, பி.கே. பெரிய அமவுண்ட் இல்லாமல் களத்தில் குதிக்க மாட்டாரே, எடப்பாடி எவ்வளவுக்கு பேசி முடித்திருக்கிறார் என்று விசாரித்தோம். 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதிருந்தே வியூகம் வகுப்பதில் தொடங்கி களப்பணியாற்றுவது வரை மொத்தமாக ‘முன்னூறு சி’ பேரம் பேசி முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடியைப் போல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பிரசாந்த் கிஷோரிடம் ஒப்பந்தம் பேசியிருப்பதாக தகவல்.
எப்படியோ... பிரசாந்த் கிஷோர் தனது வித்தையைக் காட்டியும் சில கட்சிகள் தோற்றிருக்கின்றன. ஆனாலும், அவரிடம் புதுப்புது கட்சித் தலைவர்கள் சிக்குவதால், அவரது காட்டில் எப்போதும் மழைதான்.
பாஜகவின் திடீர் எழுச்சியால் அதிர்ச்சி... பிரசாந்த் கிஷோருடன் கைகோர்க்கும் மம்தா