விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு... செப்டம்பரில் நாங்குனேரியுடன் இடைத் தேர்தல்?
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதா மணி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்குனேரி தொகுதியுடன் சேர்த்து இரு தொகுதிகளுக்கும் செப்டம்பரில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
குமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வசந்தகுமார் எம்.பி. ஆகி விட்டார். இதனால் நாங்குனேரி எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்ய அந்தத் தொகுதி காலியாகி விட்டது.இந்நிலையில் கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அத்தொகுதியும் காலியானதாக சட்டப்பேரவையின் இணையதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த இரு தொகுதிகளுக்கும் செப்டம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நாங்குனேரி தொகுதியில் காங்கிரசே மீண்டும் போட்டியிட விரும்புகிறது. ஆனால் திமுக போட்டியிட்டால் தான் ஆளும் அதிமுகவை சமாளிக்க முடியும் என்ற ரீதியில் ஒரு பேச்சு எழுந்து இரு கட்சிகளிடையே லடாய் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பணப் பட்டுவாடா புகாரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலும் இந்த இரு சட்டப் பேரவை இடைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை; ஸ்டாலின் உருக்கம்