திமுக ஸ்டைலில் பா.ஜ.க செயல்தலைவர் ஜே.பி. நட்டா

பா.ஜ.க.வின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற இவர் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 

கடந்த 2014ம் ஆண்டில் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்பு, பா.ஜ.க.வின் தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டார்.

குஜராத்தில் தனது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் தனது தீவிர விசுவாசியாகவும் இருந்த அமித்ஷாவை பா.ஜ.க. தலைவராக கொண்டு வந்த பின்பு, அந்த கட்சி முழுவதும் மோடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

அமித்ஷா தலைமையில் பா.ஜ.க. அடுத்தடுத்து பல்வேறு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்தில், பிரதமராக மோடி 2வது முறை பொறுப்பேற்றதும் தனது அமைச்சரவையில் 2வது இடத்தை அமித்ஷாவுக்கு வழங்கினார்.

இதன்படி, அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக கோலோச்சத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், பா.ஜ.க. கட்சி விதிகளின்படி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பதவியை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆனால், அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. இதற்கிடையே, பா.ஜ.க.வின் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமிக்கப்பட உள்ளார் என்று பிரதமர் பதவியேற்பு விழாவின் போதே செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழு இன்று மாலை கூடியது. இதில். ஜே.பி.நட்டாவை கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுத்தனர். தற்போதைக்கு செயல் தலைவராக செயல்படவுள்ள ஜே.பி.நட்டா, இந்த ஆண்டு இறுதியில் அமித்ஷாவின் தலைவர் பதவிக்காலம் முடிந்ததும், அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்திற்குப் பின்னர், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருந்ததாவது:

பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஜே.பி.நட்டா, கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ.க.வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்பு தேர்தல்கள் முடியும் வரை அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார். நட்டாவுக்கு எனது பாராட்டுகள்.

இவ்வாறு கூறியுள்ளார் ஜே.பி.நட்டா, பீகார் மாநிலம் பாட்னாவில் கல்லூரிப் படிப்பபை முடித்து விட்டு, இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவின் சட்டம் பயின்றார். இதன்பின், இமாச்சலப் பிரதேசத்தில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அதன்பின், 2014ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

மோடியின் முதலாவது அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார். பிராமணரான நட்டா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆசி பெற்றவர். பா.ஜ.க.வின் மாணவர் சங்கத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தி.மு.க.வி்ல் கருணாநிதி தலைவராக இருந்த போது, அடுத்த தலைவர் என்று குறிக்கும் வகையில் ஸ்டாலின் செயல் தலைவராக அக்கட்சியின் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். தற்போது அதே ஸ்டைலில் ஜே.பி.நட்டா, பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஆகியுள்ளார்.

More News >>