பெங்களூரு சிறையில் கன்னடம் பேசும் சசிகலா

பெங்களூரு சிறையில் காவலர்களிடமும், சக கைதிகளுடனும் சசிகலா கன்னடத்தில் பேசுகிறாராம். அவர் நன்றாக கன்னடம் கற்று கொண்டு விட்டார் என்பதை சிறை அதிகாரியே டி.டி.வி. தினகரனிடம் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்து சிறைக்கு சென்றார். அங்கு தனது சித்தி சசிகலாவை அவர் சந்தித்து பேசினார். இதன்பின்னர், தினகரன் சிறைக்கு வெளியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இது எல்லோருக்கும் நன்றாக தெரியும். ஆனால், ஆட்சியாளர்கள் தண்ணீர் பிரச்னையே இல்லை என்று சொல்லுகிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வந்ததால்தான், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியுற்றது.

சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று எங்கள் தரப்பில் கோரிக்கையே வைக்கவில்லை. ஆனால், அப்படி நாங்கள் கோரியிருப்பதாகவும், அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் தவறான செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

சசிகலாவை பார்த்து விட்டு வரும் போது சிறைக் கண்காணிப்பாளரை சந்தித்து பேசினேன். அவர் என்னிடம், ‘‘உங்கள் சித்தி நன்றாக கன்னடம் பேசக் கற்றுக் கொண்டு விட்டார்’’ என்ற சொன்னார்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

அமமுகவில் அடுத்த விக்கெட் காலி... முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அதிமுகவில் ஐக்கியம்
More News >>