நடிகர் சங்கத் தேர்தல் நடக்குமா? எஸ்.வி. சேகர் காட்டும் அல்வா

நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி நடக்குமா என்பதில் திடீர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதியன்று சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கும், பாக்கியராஜின் சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இதற்கிடையே, இந்த தேர்லை ரத்து செய்வதற்கோ, தள்ளிப் போடுவதற்கோ தொடர்ந்து முயற்சிகள் நடப்பதாக விஷால் அணி குற்றம்சாட்டியது.

சங்கத்தில் இருந்து 61 உறுப்பினர்களை ஏன் நீக்கினீர்கள் என்று கேட்டு, தமிழக அரசின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து நடிகர்சங்கத்திற்்கு நோட்டீஸ் வந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் நாசர் விளக்கம் அனுப்பியிருக்கிறார். அதில், அந்த உறுப்பினர்கள் சந்தாவை புதுப்பிக்கவில்லை என்றும் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் வராததால், செயற்குழுவில் முடிவு செய்து அவர்களை நீக்கினோம் என்று கூறியிருக்கிறார்.

இதே போல், தேர்தல் நடைபெறும் கல்லூரியானது, முதலமைச்சர், நீதிபதிகள் செல்லும் பாதையில் இருப்பதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது சிரமம் என்று காவல் துறை கூறியது. இதன்பின், தேர்தல் அமைதியாக நடத்தப்படும் என்றும்,காவல் துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் விஷால் அணி கமிஷனரிடம் மனு அளித்தனர்.

ஆனாலும், அந்த கல்லூரியில் தேர்தல் நடத்துவதற்கு காவல் துறை இது வரை அனுமதி தரவில்லை. இதற்கிடையே, அதே நாளில் அந்த கல்லூரியில், தனது ‘அல்வா’ நாடகத்தை நடத்துவதற்கு எஸ்.வி.சேகர் அனுமதி பெற்றுள்ளார். அவர் இது பற்றி தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில், ‘‘நான் அல்வா நாடகம் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற்றுள்ளேன். ஆனால், விஷால் அங்கு தேர்தல் நடத்துவதற்கு அனுமதி பெற்றிருக்கிறாரா? அப்படி என்றால் அந்த அனுமதி கடிதத்தை காட்டுவாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால், வரும் 23ம் தேதி திட்டமிட்டப்படி நடிகர் சங்கத் தேர்தல் நடக்குமா, அப்படி நடந்தாலும் அதே எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த பாக்யராஜ் அணி சதித் திட்டமா?
More News >>