நட்டாவுக்கு போட்டி போட்டு ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் வாழ்த்து

பா.ஜ.க. செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க.வில் முதல் முறையாக செயல் தலைவர் என்றொரு பதவி உருவாக்கப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘‘டியர் ஜே.பி.நட்டாஜி! பா.ஜ.க.வின் முதலாவது செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்காக உங்களுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள். உங்கள் சீரிய தலைமையின் கீழ் வருங்காலத்தில் பா.ஜ.க., மேலும் பல உயரங்களை எட்டும் என நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தனது முகநூல் பக்கத்தில், ‘‘பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டா அவர்களுக்கு எனது உளமாற வாழ்்த்துக்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த பதிவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் மோடி ஆகியோரின் படங்களை பெரிதாக போட்டு, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். படங்களையும் ஸ்டாம்ப் சைஸில் போட்டிருக்கிறார். இது தற்போது வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, அம்மா இருந்திருந்தால் இப்படி அவரது படத்தை சிறிதாக போட முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ஏற்கனவே பா.ஜ.க. வெற்றி பெற்றதும் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகனும் நேரடியாக அமித்ஷாவை சந்தித்து மத்திய அமைச்சர் பதவி கேட்டது, கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியது. மேலும், ஓ.பி.எஸ். விரைவில் பா.ஜ.க.வில் சேரப் போகிறார் என்று வதந்திகளும் எதிர்தரப்பில் இருந்து கிளப்பி விடப்பட்டது. அப்போது ஓ.பி.எஸ். நீண்ட விளக்கம் கொடுத்து, என் இறுதிமூச்சு வரை அ.தி.மு.க.வில்தான் இருப்பேன் என்று கூறும் நிலைமை ஏற்பட்டது. தற்போது அவரது மகன் பா.ஜ.க.வில் சேரப் போகிறாரோ என்ற வதந்தி கிளம்பியுள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரம்; 12ல் அதிமுக ஆலோசனை கூட்டம்
More News >>