வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோக்களை அகற்றும் யூ டியூப்

யூ டியூப் வீடியோக்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று பேசியதாவது:

நாங்கள் வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய வீடியோ மற்றும் ஆடியோக்களை நீக்க வேண்டுமென்று கொள்கை முடிவெடுத்துள்ளோம். கடந்த 3 மாதங்களில் மட்டும் 90 லட்சம் வீடியோ பதிவுகள் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. யூ டியூப் மிகப் பெரிய தளம் என்பதால், இந்தப் பிரச்னையை முழுமையாக தீர்ப்பது என்பது மிகவும் கடினமானது. நாங்கள் மிகவும் கடுமையாக வேலை பார்த்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்படி இந்த தளம் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆராய்ந்து முழுமையாக மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம்.

கிரெடிட் கார்டுகளில் எவ்வளவு பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வந்தாலும் மோசடிகள் நடக்கத்தானே செய்கிறது. அதே போல், நாங்களும் எவ்வளவு நீக்கினாலும் நூறு சதவீதம் சரியாக இருக்காது. 99 சதவீதம் எங்கள் பணியை செய்து விடுகிறோம். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறினார்.

சமூக தளங்களில் ஒன்றான யூ டியூப்பில் மதம், மொழி, இனம், நாடு உள்ளிட்ட பிரிவுகளில் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகள் அதிகளவில் இடம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் வெளியானது. இந்நிலையில் அவற்றை நீக்க, கூகுளின் துணை நிறுவனமான யூ டியூப் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவிடம் மீண்டும் சரண்டரான பாகிஸ்தான்
More News >>