ரஜினியின் காலா ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அடுத்ததாக ‘காலா’ படத்தை இயக்கி உள்ளார். பா.ரஞ்சித்&ரஜினியின் கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. இதற்கிடையே, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படப்பிடிப்பும் நடந்தது.
ரஜினி நடித்த இந்த இரண்டு படங்களில் எது முதலில் திரைக்கு வரும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. 2.0 படத்தில் இன்னும் கிராபிக்ஸ் வேலை நடந்து வருவதால் ரிலீஸ் செய்ய தாமதமாகும் எனவும் தகவல்கள் கசிந்தது.இந்நிலையில், ‘காலா’ படம் வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவலை நடிகரும், காலா படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.