மூன்றரை வருஷமா எங்க போயிருந்தீங்க கருணாஸ்? குட்டி பத்மினி கேள்வி

‘மூன்றரை வருஷமா செயற்குழு கூட்டத்திற்கே கருணாஸ் வரவில்லை, இவரை எப்படி திருப்பியும் துணை தலைவா் பதவிக்கு நிறுத்துறீங்கன்னு கேட்டோம், அதனால இப்ப வெளியில இருக்கோம்’’ என்று பாண்டவர் அணியில் இருந்து பாக்கியராஜ் அணிக்கு மாறிய நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதியன்று எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் இறங்கியுள்ளன.

ஆனால், அடுத்தடுத்த திருப்பங்களால் தேர்தலே நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. சங்கத்தில் இருந்து 60க்கும் மேற்பட்டவர்கள் நீக்கப்பட்டது ஏன்? என்று விளக்கம் கேட்டு, பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் விளக்கம் அனுப்பியுள்ளார். அந்த உறுப்பினர்கள் சந்தாவை புதுப்பிக்கவும் இல்லை, நோட்டீஸ் அனுப்பினால் பதிலும் சொல்லவில்லை என்பதால் அவர்களை செயற்குழுவில் முடிவெடுத்து நீக்கியதாக நாசர் தெரிவித்திருக்கிறார். இதை பதிவாளர் ஏற்றுக் கொண்டாரா? என்பது இன்னும் தெரியவில்லை.

இதற்கிடையே, எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியானது, முதல்வர், நீதிபதிகள் செல்லும் பாதையில் இருப்பதால் பாதுகாப்பு அளி்ப்பது சிரமம் என்று காவல் துறை கூறியது. அதனால், அங்கு தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தந்தி தொலைக்காட்சியில் நடிகை குட்டி பத்மினி கூறியதாவது:

நான் விஷால் அணியில்தான் இருந்தேன். அதே டீம் வரணும் என்றுதான் விரும்பினோம். ஆனால், நடிகர் கருணாஸ் மூன்றரை வருஷமா செயற்குழு கூட்டத்திற்கே வரவில்லை. இத்தனை நாள் அவர் எங்க போயிருந்தார்? அவர் எப்படி திருப்பியும் தேர்தல்ல நிக்கலாம் என்று கேட்டோம். பல குழப்பங்களுக்கு விளக்கம் கேட்டோம். என்னை மாதிரி விளக்கம் கேட்டவர்களுக்கு அங்கு மரியாதையே கிடைக்கவில்லை. அதனால் என்னை மாதிரி 6 பேர் அங்கிருந்து வந்து விட்டோம். கடந்த 6ம் தேதி வரை அங்குதான் இருந்தோம்.

அதன்பிறகுதான், வேறு அணியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே போல், நாடக நடிகர்கள் 60 பேருக்கும் மேற்பட்டவர்களை நீக்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களாக 400 பேரை சேர்த்திருக்கிறார்கள். நீக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வது வழக்கமான ஒன்றுதான். அதனால், தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு குட்டிபத்மினி கூறினார்.

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி பெருநகர காவல் ஆணையரை சந்தித்து நடிகர் விஷால் மனு
More News >>