விஷால் ஒரு சுண்டக்காய் நடிகர் எஸ்.வி.சேகர் கடுப்பு

அ.தி.மு.க.வுக்கு விஷால் எல்லாம் ஒரு சுண்டக்காய் என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக கூறியுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி, சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் உள்ளன. ஆனால், அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களை பார்த்தால், தேர்தலே இன்னும் சில மாதங்களுக்கு நடைபெறாது என்று தெரிகிறது.

சங்கரதாஸ் அணிக்கு வில்லன் நடிகர் ராதாரவியும், நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகரும் ஆதரவாக உள்ளனர். ராதாரவி சமீபத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளார். இவர்கள் மூலமாக ஆளும்கட்சி(அ.தி.மு.க.) உதவியுடன் தேர்தலை நிறுத்த முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர், ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூறியதாவது:

நடிகர் சங்கத் தேர்தல் எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு தெரிந்தே நான் அங்கு நாடகம் போட பணம் கட்டினேன். ஆனால், தேர்தலை நடத்துவதாக அறிவித்த விஷால் அணிக்கு அரங்கிற்கு பணம் கட்டி ‘புக்’ பண்ண வேண்டும் என்பது கூட தெரியவில்லை.

அதே போல், சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். நான்தான் முதலில் புகார் கொடுத்தேன். பதிவாளர் விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து சரியான பதில் சொல்ல வேண்டும். அந்த பதிலை பதிவாளர் ஏற்றுக் கொள்ளாவிட்டால், தேர்தலை நிறுத்துவதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது.

நான் எல்லாமே சட்டப்படிதான் செய்கிறேன். அதற்கு ஆளும்கட்சியான அ.தி.மு.க.தான் காரணம் என்று அவர்கள் சொன்னால், ஆண்மையற்றவர்கள் என்று அர்த்தம். அ.தி.மு.க.வுக்கு தானே எதிரி என்று விஷால் சொல்லிக் கொண்டு தெரிகிறார். அந்தக் கட்சிக்கு விஷால் எல்லாம் ஒரு சுண்டக்காய் மாதிரி. இவரால் ஆர்.கே.நகர் தேர்தலில் ஒரு அப்ளிகேஷனைக் கூட சரியா நிரப்பத் தெரியலே.

சங்கத்தில் அவர்கள் நிறைய ஊழல் செய்திருக்கிறார்கள். அதை எல்லாம் விசாரிக்க வேண்டும். ஒரு வருஷமானால் கூட பரவாயில்லே. முறையாக தேர்தல் நடத்த வேண்டும். விஷால் அணி விருப்பப்படி தேர்தல் நடந்தால் முறையாக நடக்காது. இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த பாக்யராஜ் அணி சதித் திட்டமா?
More News >>