நடிகர் சங்க தேர்தல் அம்போ.. நிறுத்தி வைக்க சங்கங்களின் பதிவாளர் அதிரடிஉத்தரவு

வரும் 23-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் மாவட்ட பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக வரும் 23-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் தற்போது நிர்வாகிகளாக இருக்கும் விஷால் தலைமையிலான பாண்டவர்கள் அணி மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களம் இறங்கியதால் நடிகர் சங்கத் தேர்தலில் விறுவிறுப்பு கிளம்பியது.

அதே வேளையில் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே சர்ச்சைகளும் சுற்றிச் சுழன்றடித்தன. தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது போலீஸ் தரப்பில் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் விஷால் தரப்பில் உயர்நீதிமன்றம் சென்றனர். உயர் நீதிமன்றமும் வேறு இடத்தில் தேர்தல் நடத்துங்கள் என்று நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் நடிகர் சங்க உறுப்பிகர்களின் வாக்காள் பட்டியலில் குளறுபடி என்ற புகாரும் எழுந்தது. உரிய காரணம் இன்றி பட்டியலில் இருந்து தங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக சங்கங்களின் மாவட்டப் பதிவாளரிடம் 61 பேர் புகார் செய்திருந்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து, விளக்கம் கேட்டும், பதிலளிக்குமாறு கூறியும் நடிகர் சங்கத்திற்கு சங்கங்களின் மாவட்டப் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதற்கு விஷால் தரப்பில் தரப்பட்ட பதில் திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் 23-ந் தேதி நடைபெற இருந்த தேர்தலை நிறுத்தி வைக்குமாறு கூறி சங்கங்களின் தென் சென்னை மாவட்டப் பதிவாளர் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆரம்பம் முதலே சர்ச்சைகள் சுற்றிச் சுழன்றடித்த நடிகர் சங்கத் தேர்தல் இப்போதைக்கு நடைபெறாது என்ற சூழலுக்கு சென்று விட்டதால் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் நடக்குமா? எஸ்.வி. சேகர் காட்டும் ‘அல்வா’
More News >>