நீரிழிவு பாதிப்பு: என்ன பழங்கள் சாப்பிடலாம்?

இரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட சர்க்கரை அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பு ஒழுங்கற்று இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக வேகமாக கூடுகிறது. நீரிழிவு பாதிப்புள்ளோர் பழங்களை சாப்பிடுவது குறித்து பல்வேறு தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன.

இந்தியா வெப்பமண்டல நாடு. இங்கு கோடைக்காலத்தில் மா, பலா, திராட்சை, தர்பூசணி போன்ற ருசிமிக்க பழங்கள் தாராளமாய் கிடைக்கும். நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு இவற்றை சாப்பிடலாமா, கூடாதா என்ற ஐயம் எழுகிறது.

பழங்களுக்கு இதயம் மற்றும் குடல், இரைப்பை தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லது. பழங்களில் அதிக அளவு வைட்டமின் சத்துகளும், ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகளும் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் சேரும் நச்சுத்தன்மையை அகற்றி, நோய்தொற்றுகளை தடுப்பதற்கு தேவையான நோய் தடுப்பாற்றலை அளிக்கின்றன.

பழங்களிலுள்ள சர்க்கரையின் அளவு மற்றும் இரத்த சர்க்கரையின் அளவில் அவை ஏற்படுத்தும் தாக்கம் இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை குறிப்பது கிளைசமிக் இன்டெக்ஸ் (Glycemic index) என்னும் அளவாகும். இக்குறியீட்டை கொண்டு, நீரிழிவு பாதிப்புள்ளோர் எந்தப் பழங்களை சாப்பிடலாம் என்றும் சாப்பிடக்கூடாது என்றும் வகைப்படுத்தப்படுகிறது. ஜிஐ என்னும் இக்குறியீடு குறைவாக இருக்கும் சில பழங்களில் கலோரி (ஆற்றல்) அதிகம் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவற்றை குறைவாக உண்ணலாம்.

மாம்பழம்: மாம்பழத்தில் வைட்டமின்கள், ஆக்ஸினேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்), நார்ச்சத்து ஆகியவை அதிக உள்ளன. இதன் கிளைசமிக் இன்டெக்ஸ் குறைவுதான். ஆனால், அதிக ஆற்றலை (கலோரி) தன்னகத்தே கொண்டது. நீரிழிவு பாதிப்பு இருந்தும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்போர் பகல்வேளையில் மட்டும் சிறிதளவு மாம்பழம் சாப்பிடலாம். தினமும் தாங்கள் எவ்வளவு கலோரிக்கான உணவை சாப்பிடுகிறோம் என்பது குறித்து அவர்கள் விழிப்பாயிருப்பது அவசியம். கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவை இரத்தத்தில் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிட வேண்டாம்.

பலா பழம்: பலாவில் நார்ச்சத்தும் கார்போஹைடிரேட் என்னும் மாவு சத்தும் அதிக அளவில் உள்ளன. ஃபிளவ்னன், கரோட்டினாய்டு மற்றும் வைட்டமின்களும் இதில் அதிகம் உள்ளன. பழுக்காத பலாவின் கிளைசமிக் இன்டெக்ஸ் குறைவு. ஆனால் கனிந்த பழத்தின் கிளைசமிக் இன்டெக்ஸ் அதிகம். கனியாத பலாவை நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடலாம். கனியாத பலாவுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய பண்பு உண்டு. கனிந்த பலா பழத்தில் அதிக கலோரி இருப்பதால் நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் பலா பழம் சாப்பிடக்கூடாது.

தர்பூசணி பழம்: தர்பூசணியின் கிளைசமிக் இன்டெக்ஸ் அதிகம். ஆகவே, நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. இதய பாதிப்பை குறைக்கக்கூடிய லைகோபேன் தர்பூசணியில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் ஒரு துண்டு தர்பூசணி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது என்று வாதிடுகின்றனர். சர்க்கரையின் அளவை கண்காணித்து அப்படி சாப்பிடுவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. கட்டுப்பாட்டான அளவு சர்க்கரை கொண்ட நீரிழிவுள்ளோர் 100 கிராம் முதல் 200 கிராம் வரை தர்பூசணி சாப்பிடலாம்.

நீரிழிவு பாதிப்புள்ளோர் பப்பாளி, நாவல், ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, அன்னாசி, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய், குழிப்பேரி மற்றும் செர்ரி ஆகிய பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.

நீரிழிவை நோய் என்றல்ல; உடலின் ஒரு நிலை என்று புரிந்து கொள்ளவேண்டும். கட்டுப்பாடாக இருந்தால் வாழ்க்கையில் அதனால் இடர்ப்பாடு இருக்காது. நீரிழிவுக்கு பட்டினி கிடக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஏற்ற உணவு பொருள்களை, சமச்சீர் உணவை சாப்பிடலாம். அந்தந்த கால கட்டத்தில் கிடைக்கும் பழங்களை அளவோடு சாப்பிடுவதில் எந்த தவறுமில்லை.

அரிசி: சொல்லப்படுவதெல்லாம் உண்மையா?
More News >>