எங்கெங்கு செல்லினும் செல்ஃபியடா
கடந்த ஆண்டு (2018) உலகம் முழுவதும் 143 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றுள் 16 கோடியே 10 லட்சம் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை அனைத்தும் செல்ஃபி என்னும் தற்படம் எடுக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் இரண்டு காமிராக்கள் உள்ள போன்களும் கிடைக்கின்றன.
சூடான விற்பனை
2019ம் ஆண்டில் கூகுள் பிக்ஸல் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆகிய இரு போன்களும் விற்பனையில் முதலிடத்தில் உள்ளன. மி மிக்ஸ், ஐபோன் எம்எக்ஸ் மேக்ஸ் ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன.
உயிருக்கு ஆபத்து:
தற்படம் என்னும் செல்ஃபி எடுக்கும் மோகம் செல்ஃபிடிஸ் எனப்படுகிறது. 2011 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செல்ஃபி எடுக்கும்போது உலகம் முழுவதும் இறந்தோர் எண்ணிக்கை 259 ஆகும். அவர்களுள் பாதி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அமெரிக்க இளைஞர்களில் 18 முதல் 34 வயதுள்ளோரில் 82 விழுக்காட்டினருக்கு செல்ஃபி எடுக்கும் பழக்கம் உள்ளது.
பிரான்ஸில் உள்ள ஈஃபில் கோபுரமே செல்ஃபி எடுக்கப்படும் இடங்களில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலமான மாடல் அழகி ஏஞ்சலா நிக்காலோ ஆபத்தான செல்ஃபிகளை எடுத்து புகழ் பெற்றுள்ளார். மலையேற்ற வீரரான டேவிட் லியானோ கொன்சாலெஸ், 2018ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் செல்ஃபி எடுத்துள்ளார். நாசா விண்வெளி மைய வீராங்கனை ஆனி மெக்லைன் விண்வெளியில் 418 கிமீ உயரத்தில் நடந்தபோது செல்ஃபி எடுத்துள்ளார்.
விலங்குகளும் செல்ஃபியும்:
டேவிட் ஸலாட்டர் என்பவரின் காமிராவில் நாருடா என்ற குரங்கு செல்ஃபி எடுத்துள்ளது. காங்கோ நாட்டு வனவிலங்கு பூங்கா காவலர் மேத்யூ சாமெளவ், கொரில்லாக்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். டச்சு புகைப்பட கலைஞர் பீட்டர் வெர்ஹூக், மெக்ஸிகோவில் 2014ம் ஆண்டு வெள்ளை சுறாவுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.
கோடிகள் புரளும் தொழில்:
கையின் நீளத்தை தாண்டி போனை பிடித்து செல்ஃபி எடுக்க உதவும் செல்ஃபி ஸ்டிக்கை யேவோங் மிங் வாங் என்பவர் 2012ம் ஆண்டு கண்டுபிடித்தார். தற்போது அதை தயாரிக்கும் தொழில் 174 மில்லியன் டாலர் மதிப்புள்ளதாக உள்ளது.
கேலக்ஸி ஏ30: விலைகுறைப்பு! எதை வாங்கலாம்?