மோசமான பீல்டிங்.. நியூசி.யிடம் கோட்டை விட்ட தெ.ஆப்ரிக்கா... அரையிறுதி வாய்ப்பும் அம்பேல்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தெ.ஆப்ரிக்காவின் சோகம் தொடர்கிறது.நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பீல்டிங்கில் சொதப்பி வெற்றியை பறிகொடுத்த தெ.ஆப்ரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் மங்கியுள்ளது.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தெ.ஆப்பிரிக்க அணியின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. அதிரடி வீரர்களைக் கொண்டுள்ள டூ பிளசிஸ் தலைமையிலான தெ.ஆ அணி தொடர்ந்து அடிமேல் அடி வாங்கி வருகிறது. நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன் வரை தான் ஆடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என்று மொத்தமே 3 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருந்தது. இதனால் நேற்றைய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் ஆடியது தெ.ஆப்பிரிக்க அணி .
பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவர் போட்டியாக நடைபெற்றது.. முதலில் பேட்டிங் செய்த தெ. ஆப்பிரிக்க அணி, ரன்களை குவிக்க சிரமப்பட்டாலும், தட்டுத் தடுமாறி 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டூசன் 67 ரன்களும், ஆம்லா 55 ரன்களும் சேர்த்தனர்.
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறியது. தெ.ஆ.வீரர்களின் வேகத்தில் மன்ரோ (9), கப்டில் (35), டெய்லர் (1) லதாம் (1), நீஷம் (23) ஆகியோர் சீரான இடைவெளியில் அவுட்டாகி வெளியேற நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது நியூசிலாந்து வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டும் எகிறியது.
இந்த நேரத்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த கிராண்ட் ஹோம் அதிரடி காட்டத் தொடங்கினார். 39 பந்தில் அரை சதம் அடித்த கிராண்ட் ஹோம் 60 ரன்களை குவித்தார். நங்கூரம் பாய்ச்சியது போல் வில்லியம்சன் நிலைத்து நின்று ஆடினாலும் இந்த ஜோடி கொடுத்த கேட்ச், மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை தெ.ஆ.வீரர்கள் பதற்றத்தில் வீணடித்தனர்.
இதனால் நியூசிலாந்து கண்டம் தப்பியது போல் கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த வில்லியம்சன், சதத்தை கடந்ததுடன் நியூசிலாந்து அணியின் வெற்றியை எளிதாக்கினார்.கடைசி வரை ஆட்டம் இழக்காமல்106 ரன்கள் குவித்த வில்லியம்சன் அணியின் வெற்றிக்கு காரணமானார்.
நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் தெ.ஆப்பிரிக்க அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறலாம். இன்னும் 3 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மூன்றிலும் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதி வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான் என்ற பரிதாபத்துக்கு தெ.ஆப்பிரிக்க அணி தள்ளப்பட்டு விட்டது.
உலகக் கோப்பைத் தொடரில் தற்போது வரை 25 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளே அரையிறுதிக்கும் முன்னேறும் வாய்ப்புகள் அதிகம் என்பதே தற்போதைய நிலவரம்.