காங்கிரஸ் தலைவர் தேர்வில் ராகுல் பங்கேற்க மறுப்பு
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி இன்னும் உறுதியாக இருக்கிறார். அது மட்டுமல்ல, புதிய தலைவரை தேர்வு செய்வதில் தான் தலையிட மாட்டேன் என்றும் கூறிவிட்டார்.
நாடளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வயநாடு பதுதியில் பெரும் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் எதிர்பாராத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த முறையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் போனது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார்.
ஆனால், அவரே தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கட்சியில் யார் தலைவர் என்பது முடிவாகாமல் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், ராகுல்காந்தி இன்று(ஜூன்20) ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘நான் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததில் எந்த மாற்றமும் இல்லை. புதிய தலைவரை கட்சிதான் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் அந்த விஷயத்தில் தலையிட மாட்டேன். நான் அந்த நடைமுறையில் பங்கேற்றால், அது பிரச்னையை ஏற்படுத்தும்.
எனவே, கட்சிதான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
ஓட்டு இருந்தும் ஜெயிக்க முடியாது; பாவம் காங்கிரஸ்