மொபைல் போனில் மும்முரம்..! ஜனாதிபதி உரையை கண்டு கொள்ளாத ராகுல்காந்தி
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, அவரின் உரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டுகொள்ளவேயில்லை. தனது மொபைல் போனை நோண்டியபடியே ராகுல் அவையில் செயல்பட்டது இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், மக்களவை மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் என அனைவரும் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தியதை பவ்யமாக கவனித்தனர். உரையில் முக்கிய விஷயங்கள், அறிவிப்புகள், திட்டங்களை குடியரசுத் தலைவர் உச்சரித்த போது கட்சிப் பாகுபாடு இன்றி மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஆனால் பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்களுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவதை சற்று கூட ஏறிட்டுப் பார்க்காமலும், பேசுவதை காதில் கேட்காமலும் தனது மொபைல் போனிலேயே ராகுல் கவனம் செலுத்தினார். சிறு பிள்ளை போல மொபைலில் டைப் அடிப்பதும், விதவிதமாக படம் எடுப்பதிலேயே ராகுலின் கவனம் இருந்தது. இப்படியே குடியரசுத் தலைவரின் ஒரு மணி நேர உரையின் போது சுமார் 24 நிமிடங்களை செலவழித்த ராகுல், கடைசி வரை குடியரசுத் தலைவர் உரை மீது கவனம் செலுத்தவில்லையாம்.
இத்தனைக்கும், ராகுலின் அமர்ந்திருந்த அவருடைய தாய் சோனியா காந்தியோ, குடியரசுத் தலைவரின் உரையை உன்னிப்பாக கவனித்தபடி அவ்வப்போது மேஜையைத் தட்டி வரவேற்றபடியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர இந்தியாவில் பெரும் பகுதிகாலம் ஆட்சி செய்த ஒரு பெரிய கட்சியான காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். அவர் நாட்டின் உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்தில், நாட்டின் முதல் குடிமகன் நிகழ்த்திய உரையின் போது இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்ற ரீதியில் சர்ச்சைகள் இப்போது வெடித்துள்ளது.
மக்களவை புதிய சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகிறார்