கஜா புயல் இழப்பீடு வழக்கு..! கொள்கை முடிவெடுக்க வருவாய் நிர்வாகத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பையத்தைச் சேர்ந்த முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"கடந்த 2018 நவம்பரில் வீசிய கஜா புயலில் எனது ஓட்டுவீடு முழுமையாக சேதமடைந்தது. இதற்கு அரசு அறிவித்தபடி இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தேன். என் விண்ணப்பத்தை ஏற்று வீட்டினை வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இருப்பினும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், கஜா புயல் நிவாரணம் தொடர்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் முழுமையாக சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் பகுதியாக சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு நிவாரண தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு இழப்பீடு வழங்கவில்லை. மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ,"கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு வருவாய் மாவட்டங்களில் பெரியளவில் சேதம் ஏற்பட்டதை மறக்க முடியாது. இந்த புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதரங்களையும், உடைமைகளையும், மரங்களையும், பயிர்களையும் இழந்து தவித்தனர். மீனவர்கள் படகுகளை இழந்தனர்.
இவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியது. இதில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. கூரை வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய போது, ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்காதது திட்டமிட்டு செய்யப்பட்டதா எனத் தெரியவி்ல்லை.
பல்வேறு இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழுந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததை ஏற்க முடியாது. அரசின் இந்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. இது ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதுகிறோம்.
இதனால் கஜா புயல் பாதிப்பால் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கொள்கை முடிவெடுக்க வேண்டும். அந்த கொள்கை முடிவு அடிப்படையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். இந்த அரசாணையில் அறிவிக்கப்படும் நிவாரண தொகை, பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக முழு வீடு கட்டுவதற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.
ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு முழு இழப்பீடு வழங்கும் வரை இடைக்கால நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்"என உத்தரவிட்டுள்ளார்.
மோடியுடன் எடப்பாடி சந்திப்பு; தே.ஜ. கூட்டணியில் நீடிப்பது உறுதி