4 எம்.பி.க்களை இழுத்த பா.ஜ.க சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சி அடுத்து தமிழகத்துக்கு குறி?

அமெரிக்காவுக்கு சந்திரபாபு நாயுடு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில், அவரது தெலுங்கு தேசம் கட்சியின் 4 ராஜ்யசபா எம்.பி.க்களை பா.ஜ.க. இழுத்து கொண்டது.

நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கட்சிகளை, பா.ஜ.க. இப்போது துவம்சம் செய்யத் தொடங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க.

 

பதவியேற்பதற்கு முன்பே மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சியில் இருந்து மூன்று எம்.எல்.ஏ.க்கள், 52 கவுன்சிலர்கள் என்று ஒரு படையை பா.ஜ.க. தன் பக்கம் இழுத்து கொண்டது. மேலும், மம்தா பானர்ஜியின் மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்களை வளைப்பதில் தொடர்ந்து பா.ஜ.க. முயன்று வருகிறது. இதற்கு மம்தாவின் முக்கிய தளபதியாக இருந்து பின்னர் பா.ஜ.க.வுக்கு தாவிய முகுல்ராயே கத்தியாக பயன்படுத்தப்பட்டார்.

அடுத்த கட்டமாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை குறிவைத்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பிருந்தே, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து பலர் தங்கள் கட்சிக்கு வரப் போகிறார்கள் என்று பா.ஜ.க.வினர் கூறி வந்தனர். இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்கள் ஒய்.எஸ்.சவுத்ரி, டி.ஜி.வெங்கடேஷ், ஜி.எம்.ராவ், சி.எம்.ரமேஷ் ஆகியோர் பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர்.

தெலுங்கு தேசம் கட்சியில் 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 4 பேர் வந்து விட்டதால், இந்த 4 பேர் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. காரணம், ஒரு கட்சியில் இருந்து மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் தனியாக சென்றால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த அடிப்படையில் 4 எம்.பி.க்களும் பா.ஜ.க.வில் இணைந்து விட்டனர். அவர்கள் துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவராக இருக்கும் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து தங்கள் முடிவை தெரிவித்துள்ளனர்.

தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் கோடை விடுமுறையைக் கழிக்க அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். இந்த சமயத்தில் 4 எம்.பி.க்கள் தாவியது அவருக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எனினும், அவர் விடுத்த அறிக்கையில், ‘‘ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்கும் பிரச்னையில்தான் நாங்கள் பா.ஜ.க.வுடன் மோதினோம். அதே போல், ஆந்திர மக்கள் நலனுக்காகவே மத்திய அமைச்சர் பதவிகளை தியாகம் செய்தோம்.

இப்போது தெலுங்குதேசம் கட்சியை வீழ்த்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆனால், இதெல்லாம் எங்கள் கட்சிக்கு புதிதல்ல. எனவே, தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பதற்றமடையத் தேவையில்லை’’ என்று கூறியிருக்கிறார். மேற்கு வங்கம், ஆந்திராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் கால் பதிக்க பா.ஜ.க. விரும்புகிறது. தமிழகத்தில் தி.மு.க. தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதால் அந்தக் கட்சியை விலை பேசுவது மிகவும் கடினம். கூட்டணிக்கு வேண்டுமானால் இழுக்கலாம். அதே சமயம், அ.தி.மு.க.வில் வலுவான தலைமை இல்லை. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைவரின் மீதும் ஊழல் புகார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. குட்கா, டெண்டர், கோடநாடு என்று எதையாவது தூசி தட்டினாலே போதும். எனவே, தமிழகத்தில் பா.ஜ.க. கால் பதிக்க ஒன்று, தி.மு.க.வுடன் கூட்டணி சேரும். அது முடியாவிட்டால், திரிணாமுல், தெலுங்குதேசம் கட்சியைப் போல் அ.தி.மு.க.வை உடைத்து வளைக்க பா.ஜ.க. முயற்சிக்கும். அந்த ஆபரேஷன் எப்போது என்பதுதான் தெரியவில்லை.

More News >>