கேரள தண்ணீர் வேண்டாம்: எடப்பாடி அவசர மறுப்பு, பினராயிக்கு ஸ்டாலின் நன்றி
கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் அனுப்பி வைப்பதாக கூறினார். ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதை வாங்க மறுத்து விட்டார். இதற்கிடையே, தண்ணீர் தர முன்வந்த பினராயிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தண்ணீருக்காக மக்கள் படும் துயரங்களை, தினத்தந்தி, தினமலர் உள்ளிட்ட தமிழ் நாளேடுகள் பக்கம், பக்கமாக படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர், ‘‘அப்படி ஒன்னும் தண்ணீர் பஞ்சம் எல்லாம் இல்லை, எதிர்க்கட்சிகள்தான் வீண் வதந்திகளை பரப்புகிறார்கள்’’ என்று பேசினர்.
இன்னொரு புறம், சில இடங்களில் மோட்டார் ரிப்பேர் ஆகி இருக்கலாம், அதனால தண்ணீர் வராமல் போயிருக்கலாம் என்ற ரீதியில் மற்ற அமைச்சர்களும் பேட்டி கொடுக்க மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். ‘‘அமைச்சர்கள் வசிக்கும் பசுமைவழிச்சாலை பங்களாக்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கவே இருக்காது. அதனால்தான், அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை என்பதே வதந்தியாக தெரிகிறது’’ என்று மக்கள் குமுறுகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் மீது மக்கள் கொண்டுள்ள கோபத்திற்கு எண்ணெய் ஊற்றுவது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில்களில் அனுப்பி வைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். ஆனால், இப்போதைக்கு தண்ணீரே தேவையில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
இந்த செய்தி வெளியானதும், தி.மு.க. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘தமிழக மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு தண்ணீர் வழங்கத் தயார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட செய்தியைப் பார்த்தவுடன், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், உடனடியாக கேரள முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு,நன்றி தெரிவித்ததுடன், தமிழகத்திற்குத் தண்ணீர் தந்து உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவிவரும் நல்லுறவின் அடிப்படையில், தமிழக மக்களின் தாகத்தைத் தீர்க்க கேரள முதல்வர் அளிக்க முன்வந்துள்ள தண்ணீரை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாகவும், பினராயி விஜயனிடம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.