பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் பயங்கரம் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் ஒரு கும்பல், கல்லூரி மாணவிகளை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், அவர்களை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி தமிழக மக்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தற்போது அதே போல், கள்ளக்குறிச்சி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகளை ஏமாற்றி கரும்புத் தோட்டத்திற்குள் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து தினகரன் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
கள்ளக் குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்த ஒருவரின் மகள், கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும்போது அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பைனான்சியர் ராஜா(45) மற்றும் அவரது நண்பரான வஉசி நகர் பகுதியை சேர்ந்த வேலுமணி(24) ஆகியோர் தினமும் பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது குறித்து கல்லூரி மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
தொடர்ந்து இருவரையும் எச்சரித்தும், தங்களுடைய போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து கல்லூரி மாணவியின் தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் 2 நாட்களுக்கு முன் வழக்கு பதிந்து ராஜா மற்றும் அவரது நண்பர் வேலுமணி ஆகியோரை கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், பைனான்சியர் ராஜா பல இளம்பெண்களை ஏமாற்றி மயக்கியுள்ளனர். பின்னர், அவர்களை ஆபாச படம் எடுத்து வைத்து கொண்டு, அதைக் காட்டி மிரட்டியே தனது கரும்பு தோட்டத்தில் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போன்று, அந்த 2 பேரால் பாதிக்கப்பட்ட பெண்கள், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர். ராஜாவின் செல்போனில் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை அழிக்க வேண்டுமென்று போலீசாரிடம் சென்று வலியுறுத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார், பைனான்சியர் ராஜாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது, 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடியோக்கள் அனைத்தும் உண்மையிலே எடுக்கப்பட்டதா? அல்லது இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
பைனான்சியர் ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட கும்பல், பள்ளி, கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பிடித்து வந்து, தங்கள் காமலீலைகளுக்கு பலியாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.
வீடியோக்களில் சில இளம் பெண்கள் குளிக்கும் காட்சிகள் உள்ளதால், அந்த பெண்களுக்கு தெரியாமல் அவற்றை எடுத்து மிரட்டி பணிய வைத்திருப்பார்களோ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ராஜாவின் கரும்பு தோட்டம் அருகில் 25க்கும் மேற்பட்ட மதுபான காலி பாட்டில்கள் குவியலாக கிடக்கிறது. மதுபோதையில் பள்ளி, கல்லூரி மாணவிகளை குறிவைத்து, இதேபோன்று உல்லாசமாக இருந்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.
ராஜாவின், நண்பர்கள் கள்ளக்குறிச்சி போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்து கொண்டு வாகனங்களில் போலீஸ் என எழுதிவைத்துக்கொண்டு வலம் வந்துள்ளனர். தற்போது ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தால் பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களை மிஞ்சும் அளவுக்கு தகவல் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.