தாங்க முடியலே... அமைச்சரே என்னே உங்கள் விளக்கம்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியேற்றப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகவும் உறுதியாக உள்ளார். இது தொடர்பாக, அரசியல் கட்சிகளின் கருத்தைக் கேட்பதற்காக ஒரு கூட்டத்தை டெல்லியில் கூட்டியிருந்தார். இதில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட 40 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் அ.தி.மு.க. சார்பில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் கலந்து கொள்ளச் சென்றனர். ஆனால், அவர்களை அந்த கூட்டத்தில் அனுமதிக்க மத்திய அரசு அதிகாரிகள் மறுத்து விட்டனர். கட்சித் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் என்று அதற்கு காரணமும் தெரிவித்தனர். எனினும், ஆம்ஆத்மி உள்ளிட்ட மூன்று கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்காமல் பிரதிநிதிகள்தான் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

ஒடிசாவில் முதல்வர் நவீன்பட்நாயக்கே அவரது பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு தலைமை வகிக்கிறார். அதே போல், ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் தலைமை வகிக்கிறார். அதனால், அவர்களே பிரதமர் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளதால், யார் போவது என்ற போட்டி ஏற்பட்டதாகவும், அதனால்தான் இருவரும் இல்லாமல் சி.வி.சண்முகம் அனுப்பப்பட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.

ஆனால், பா.ஜ.க.வின் உற்ற தோழனாக விளங்கும் அ.தி.மு.க.வின் பிரதிநிதிக்கு மோடி கூட்டத்தில் அனுமதியில்லை என்பது சூடான செய்தியாகி விட்டது. குறைந்தபட்சம், அ.தி.மு.க.வில் இருந்து யார் வருகிறார்கள் என்று மத்திய அரசின் அதிகாரிகள் முன்கூட்டியே கேட்டு தெரிந்து, அதற்கேற்ப ஒருவரை அனுமதித்திருக்கலாமே? இணக்கமாக இருந்தாலும் இந்த அளவுக்குத்தான் தகவல் தொடர்பு இருக்கிறதா என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார் புறப்பட்டு சென்றார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘‘அமைச்சர் சி.வி.சண்முகம், பிரதமரின் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தவறான செய்தி. கட்சித் தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பதால், அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவுதான்’’ என்று சிம்பிளாக விளக்கம் கொடுத்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘தமிழகத்திற்கு ரூ.1000 கோடி இழப்பீடு தருமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலில் வலியுறுத்தப்படும். 69 பொருட்களுக்கு வரியை குறைக்க வலியுறுத்தப்படும்’’ என்றார்.

More News >>