கர்நாடக அரசின் ஆயுள் எவ்வளவு நாளைக்கோ தெரியல - தேவகவுடா புலம்பல்

கர்நாடகத்தில் தனது மகன் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆயுள் அற்ப ஆயுளாக முடிந்தாலும் முடியலாம். சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தாலும் ஆச்சர்யமில்லை. தற்போது காங்கிரசின் போக்கை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. எல்லாமே காங்கிரசின் கையில்தான் உள்ளது முன்னாள் பிரதமர் தேவகவுடா புலம்பியுள்ளார்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. பாஜக ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் வலியப் போய் கூட்டணி வைத்தது காங்கிரஸ்.முதல்வர் பதவியையும் குமாரசாமிக்கு தாரை வார்த்தது. அமைச்சரவையில் மட்டும் கூடுதலாக பங்கு போட்டுக் கொண்டது காங்கிரஸ்.

ஆனால் குமாரசாமி ஆட்சி அமைந்தது முதலே ஒரே குழப்பமாக நாட்கள் நகர்ந்து செல்கிறது. அவ்வப்போது பாரதிய ஜனதாவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, காங்கிரசில் அமைச்சர் கிடைக்காததால் அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி என திடீர், திடீரென குழப்பங்கள் உருவாகி ஆட்சி கவிழ்ந்து விடுமோ? என்ற சூழல் உருவாவது சகஜமாகி விட்டது.

சமீபத்தில் கூட இதனை வெளிப்படையாகவே முதல்வர் குமாரசாமி கூறியிருந்தார். இந்த ஒரு வருடமாக நிம்மதியாகவே ஆட்சி நடத்த முடியவில்லை. நானும் நிம்மதியாக தூங்கியதில்லை என புலம்பியிருந்தார். இதே போன்றே குமாரசாமியின் தந்தையான முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் அடிக்கடி புலம்பி வந்தார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி படுதோல்வியை சந்தித்த பின் இரு கட்சிகளிடேயே முட்டல் மோதல் அதிகரித்துள்ளது.மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காரணம் என நீதான், நான் தான் என இரு கட்சிகளுமே பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவதால் விரிசல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழுத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமய்யா, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணியால் காங்கிரசுக்கு கெட்ட பெயராகி விட்டது. எனவே உறவை துண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி உள்ளார். இதனால் கூட்டணி எந்த நேரத்திலும் முறியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தான், பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேவகவுடா புலம்பித் தள்ளியுள்ளார். கூட்டணி ஆட்சியில் என் மகன் அனைத்தையும் விட்டுக் கொடுத்தே அரவணைத்து செல்கிறான். சமீபத்தில் கூட காங்கிரசுக்கு எங்கள் பங்கு மந்திரி பதவியை விட்டுக் கொடுத்தோம். கூட்டணி வைக்கும் போது 5 வருடங்களுக்கு தொந்தரவில்லாமல் ஆதரவு கொடுப்போம் என காங்கிரசார் கூறினார். ஆனால் இப்போது காங்கிரசின் போக்கைப் பார்த்தால் குமாரசாமி ஆட்சி எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தாலும் வரலாம். எல்லாமே காங்கிரசின் கையில்தான் உள்ளது என்று தேவகவுடா புலம்பியுள்ளார்.

தேவகவுடா கூறியுள்ளது குறித்து முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவிக்கையில், அதெல்லாம் ஆட்சிக்கு ஒன்றும் ஆபத்தில்லை .ஆட்சி கவிழாது. 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். என் தந்தை தேவ கவுடா கூறிய கருத்தை மீடியாக்கள் தவறாக திரித்துள்ளன என்று தெரிவித்துள்ளார். எது எப்படியோ கர்நாடக அரசியலில் மீண்டும் ஒரு பெரும் குழப்பம் உருவாவது உறுதியாகிவிட்டது. அது ஆட்சி கவிழும் நிலைக்கு செல்லுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும் என்கின்றனர் கர்நாடக அரசியலை நன்கு அறிந்தவர்கள்.

More News >>