பிரதமர் மோடியுடன் சமாதானமான கெஜ்ரிவால் - மத்திய அரசுடன் இனி இணக்கமாம்
மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்து சமாதானமாகியுள்ளார். மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், தமது அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் பிரதமரிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்தது முதலே பாஜகவுக்கும், அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. டெல்லியில் ஆட்சியைப் பிடித்து கெஜ்ரிவால் முதல்வரான பின்பு மோதல் மேலும் வலுத்தது.டெல்லி துணை நிலை ஆளுநர் மூலம் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு போக்குக் காட்டியது. இதனால் ஆளுநருக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பல கட்ட போராட்டங்களை நடத்தியே காலத்தை ஓட்டி வந்தார் கெஜ்ரிவால் .
தற்போது 2-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னரும் போக்கு காட்டி வந்தார் கெஜ்ரிவால் .மோடி பிரதமராக பொறுப்பேற்று 20 நாட்களை கடந்தும் அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தார். கடந்த 7-ந்தேதி கூட மத்திய அரசின் அனைவருக்கும் சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் திட்டத்தை கிண்டல் செய்திருந்தார் கெஜ்ரிவால் . ஆயுஷ் மான் திட்டத்தை விட டெல்லியில் தமது அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மருத்துவத் திட்டம் 10 மடங்கு மேலானது என்று கடுப்பேற்றிய ருந்தார். 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் புறக்கணித்தார்.
இந்நிலையில் மத்திய அரசுடன் இனியும் மோதிக் கொண்டே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த கெஜ்ரிவால் இன்று திடீரென பிரதமர் மோடியை சந்தித்து கை குலுக்கி சமாதானமாகி உள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானதற்கு வாழ்த்து தெரிவித்த கெஜ்ரிவால், மத்திய அரசுடன் இனி இணக்கமாகப் போவதாக சரண்டர் ஆகியுள்ளார்.
அத்துடன் டெல்லியின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க, யமுனை நதியில் மழைக்காலத்தில் வீணாக நீரை சேமிக்கும் மாநில அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார். மேலும் மாநில அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள நவீன பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்வையிட வருமாறும் பிரதமர் மோடிக்கு அன்பு அழைப்பு விடுத்த கெஜ்ரிவால், இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் மாய்ந்து, மாய்ந்து பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் கெஜ்ரிவால் .
டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த முறை மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67-ல் ஆம் ஆத்மி வெற்றி பெற்று முதல்வரானார் கெஜ்ரிவால் .ஆனால் இம்முறை மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. இந் நிலையில், மத்திய அரசுடன் இனியும் மோதிக் கொண்டே இருந்தால் டெல்லியில் வளர்ச்சித் திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியாது. அது சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலித்து விடும் என்பதாலேயே பிரதமர் மோடியுடன், கெஜ்ரிவால் சமாதானமாகப் போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.