மழை வேண்டி கோயில்களில் நாளை யாகம் - அதிமுகவினருக்கு பறந்தது கட்டளை
தண்ணீர் பிரச்னை தீர்க்க வருண பகவானை வேண்டி தமிழகம் முழுவதும் யாகம் நடத்தி வழிபாடு செய்யுமாறு அதிமுகவினருக்கு ஓ பிஎஸ்சும், இபிஎஸ்சும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கோயில்களில் நாளையே யாகம் நடத்த மாவட்டச் செயலாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்கும் மக்கள் அல்லாடுகின்றனர். போதிய இல்லாததும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணம் என்றாலும், தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் நாளை முதல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் மெத்தனம் காட்டி வந்த தமிழக அரசு தற்போது விழித்துக் கொண்டு வேட்டாக சுறுசுறுப்பு காட்ட ஆரம்பித்துள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குடிநீர் பிரச்னையை சமாளிக்க ரூ 200 கோடியை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு வருவதற்காக ரூ 65 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த அறிவிப்பாக, வருண பகவானிடம் மழை வேண்டி கோயில்களில் யாகம் வளர்த்து வழிபாடு நடத்தவும் அதிமுக சார்பில் கட்சியினருக்கு உத்தரவு பறந்துள்ளது.தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய ஊர்களில் உள்ள கோயில்களில் நாளை யாகம் நடத்துமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் உத்தரவிட்டுள்ளனர். இதில் அதிமுக நிர்வாகிகளும் அந்தந்த நிர்வாகிகளும் பங்கேற்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள யாகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தண்ணீர் பிரச்னைக்காக நாளை முதல் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதற்குப் போட்டியாக அதிமுக சார்பில் கோயில்களில் யாகம் நடத்தப்படுவது பெரும் பரபரப்பையும் கூடவே சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.