யோகா தினம் பற்றி கிண்டல் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்தி

ராகுல் காந்தியின் குசும்புத்தனமான செயல்பாடுகளால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாவது வாடிக்கையாகிவிட்டது போலும். நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் போது மொபைல் போனில் கவனம் செலுத்தி விமர்சனத்திற்கு ஆளானார். இன்றோ யோகா தினத்தைப் பற்றி கிண்டல் செய்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டது சர்ச்சையாகியுள்ளதுடன் கடும் கண்டனக் குரல்களும் எழுந்து வருகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் அமர்க்களமானது. பிரதமர் மோடி, ராஞ்சியில் 40 ஆயிரம் பேருடன் யோகாவில் பங்கேற்றார். இதேபோல் முக்கிய தலைவர்கள், பள்ளி மாணவர்கள், ராணுவ வீரர்கள் என பல தரப்பினரும் ஆர்வமுடன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதே போன்று இந்திய ராணுவத்தில் உள்ள மோப்ப நாய்ப் படையில் உள்ள மோப்ப நாய்களும் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து யோகா செய்யும் காட்சிகள் வெளியானது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் அமோகமாக பகிரப்பட்டது.

ராணுவ வீரர்களும், நாய்களும் யோகா செய்யும் இந்த புகைப்படத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'புதிய இந்தியா’ என்ற தலைப்புடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராகுலின் இந்த டிவிட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ராகுல் காந்தியின் இந்தக் கிண்டலான பதிவுக்கு பா.ஜ.க.வினர் அதிகமாகவே கொந்தளித்துள்ளனர். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நலின் கோலி கூறுகையில், பிரதமர் மோடி தலைமையில் புதிய இந்தியா உருவாகி வரும்போது, ராகுல் காந்தி தலைமையில் ஒரு புதிய காங்கிரஸ் உருவாகி வருகிறது போலும். ராகுல் காந்திக்கு வாழ்க்கை என்பதே ஒரு தொடர்ச்சியான நகைச்சுவையாகவும், தனது செல்ல நாய்க்குட்டியை நினைவுபடுத்தும் புகைப்படத்தை வெளியிடும் வாய்ப்பாகவும் இருக்கும் போலிருக்கிறது என்று கண்டித்துள்ளார். இதே போன்று ராகுல் காந்தியையும் காங்கிரசையும் கேலி செய்து பலரும் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை அவமதிப்பது போல, மொபைல் போனில் கவனம் செலுத்தி கடும் விமர்சனத்துக்கு ராகுல் காந்தி ஆளானார்.இன்று அடுத்த சர்ச்சையிலும் சிக்கி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ராகுல் காந்தி.

More News >>