உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவிடம் தாக்குப் பிடிக்குமா ஆப்கன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடை போடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி எப்படி சமாளிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, இதுவரை 4 போட்டிகளை எதிர்கொண்டு 3 போட்டிகளில் வெற்றியும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தான நிலையில் 7 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி யோ 5 போட்டிகளிலும் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் பரிதாபமாக உள்ளது. மேலும் அந்த அணி வீரர்களின் நடவடிக்கைகளாலும் பெரும் குழப்பத்தில் உள்ளது. இதனால் இன்று சவுத் தாம்டனில் நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தானை பந்தாடி இந்திய அணி பல சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இத்தொடரில் இதுவரை 2 சதங்களுடன் 319 ரன்கள் குவித்துள்ளார். இன்றைய போட்டியிலும் அவருடைய ரன்வேட்டை தொடரும் என எதிர் பார்க்கலாம். அவருடன் கடந்த போட்டியில் களமிறங்கி அரைசதம் கடந்த லோகேஷ் ராகுல் மீண்டும் அசத்துவார் என்று நம்பலாம். கேப்டன் கோஹ்லியும் அதிரடியை தொடர்கிறார். காயம் காரணமாகதவான் விலக, 4-வது இடத்தில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்து அவரும் தனது இடத்தை தக்கவைக்க இந்தப் போட்டியில் சாதிப்பார் என எதிர் பார்க்கலாம். இதே போன்று ஹர்திக் பாண்ட்யா, தோனி ஆகியோரும் விரைவாக ரன் குவிப்புக்கு உதவுகின்றனர்.

பந்து வீச்சிலும் இந்திய வீரர்கள் பும்ரா, பாண்ட் யா, விஜயசங்கர்,சகால், குல்தீப் படை சாதித்து வருகிறது . காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் இன்றைய போட்டியில் பங்கேற்காத நிலையில் முகமது சமி வேகத்தில் மிரட்ட வருகிறார். இதனால் பலமிழந்து தத்தளிக்கும் ஆப்கனை பந்தாடி புள்ளிப் பட்டியலில் இந்தியா முன்னேறும் என்பது உறுதி. இன்றைய போட்டியில் என்னென்ன சாதனைகளை இந்தியா நிகழ்த்தப் போகிறது என்பது தான் இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது எனலாம்.

இம்ரான்கானின் அட்வைஸை கேட்காதது ஏன்? - பாக்.கேப்டனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
More News >>