ரோமியோவாக உலா வந்த திருமண மோசடி மன்னன் கைது
சென்னையில் பெண் மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வித்யூத் என்ற சக்கரவர்த்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் .
அவர் கொடுத்த புகாரில் திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகி பழகியதாகவும், வாஷிங்டனில் மருத்துவராக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்து விட்டதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி ஒன்றிற்கு வரவழைத்து திருமணம் செய்து கொள்வதுபோல் பேசி ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யப் போவதாகவும் அதற்காக பண உதவி வேண்டும் எனக் கேட்டு சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை ஏமாற்றியதாகவும் பெண் மருத்துவ அதிகாரி புகாரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 17ஆம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வசிக்கும் அரசு பெண் டாக்டரை தமிழ் மேட்டரி மேனியில் தகவல் மையம் மூலமாக திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பாலியல் வல்லுணர்வு செய்தும் அவரிடம் இருந்த ரூபாய் 20 லட்சத்தை ஏமாற்றியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் தனிப்படை அமைத்து சக்கரவர்த்தியை போலீசார் தேடி வந்தனர். லால்குடியில் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். திருச்சி மத்திய சிறையில் சக்கரவர்த்தி இருப்பதை அறிந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக 4 நாட்கள் போலீஸ் காவலில் சக்கரவர்த்தியை எடுத்து விசாரித்தனர். விசாரணை செய்ததில் தான் பல பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியது.
விசாரணை செய்ததில் சக்கரவர்த்தி தமிழகம் முழுவதும் 9க்கும் மேற்பட்ட பெண்களை திருமண தகவல் இணையதளம் மூலமாக ஏமாற்றி சுமார் 9 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. திருமண தகவல் மையம் மூலம் திருமணமாகாத மருத்துவம், பொறியியல் பட்டதாரிகளையும் பணக்கார விதவை பெண்களை குறிவைத்து பண மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
வாட்ஸ்அப் பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பேசி பழகி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதேபோன்று 2014ஆம் ஆண்டு இரண்டு பெண்களை ஏமாற்றி அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது .மேலும் சக்கரவர்த்திக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இருப்பினும் சக்கரவர்த்தி, தமிழ் மேட்ரிமோனி என்ற திருமண தகவல் மையத்தில் அஜய், விஜய், சக்கரவர்த்தி, விஜயகுமார், கிரிஜா, சரவணன் போன்ற பல்வேறு பெயர்களில் பதிவு செய்து பல பெண்களை ஏமாற்றி உள்ளார். மோசடி செய்து பெறப்பட்ட பணத்தை வைத்து திருவண்ணாமலை, வேலூர் விழுப்புரம் ,உள்ளிட்ட பகுதிகளில் ஆடம்பர பங்களாக்களும் 3 சொகுசு கார்களும் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து எத்தனை பெண்களை சக்கரவர்த்தி ஏமாற்றியுள்ளார் என்பது குறித்தும் மோசடி செய்து பெறப்பட்ட பணத்தை குறி வைத்து எவ்வளவு சொத்துக்கள் வாங்கி இருக்கிறார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்
நேர நெருக்கடி: எப்படி சமாளிப்பது?