கள்ளக்காதலால் கடந்த 10 ஆண்டுகளில் 1,459 கொலைகள்..! உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்

கள்ளக்காதல் தகராறில் ரஞ்சித் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 10 ஆண்டுகளில் கள்ளக்காதல் காரணமாக தமிழகத்தில் நடந்த கொலைகள் எவ்வளவு என்ற கேள்வியை அரசுக்கு எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை பிற்பகல்) மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

அதில், கள்ளகாதல் காரணமாக சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் 158 கொலைகளும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1301 கொலைகளும் நடந்துள்ளதாக கூறபட்டது.

இதே போல கள்ளகாதல் காரணமாக கடத்தல், மிரட்டல், தாக்குதல் உட்பட 213 குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளதாகவும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 621 குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டது. இந்நிலையில் வழக்கு ஜூலை 5 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக கள்ளகாதல் காரணமாக பெற்ற தாயே குழந்தையை கொலை செய்யும் அதிர்ச்சிக்கரமான சம்பவங்கள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், இது திருமணம், குடும்பம் என்ற கட்டமைப்பை பாதிக்கும் சமூக பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக எச்சரித்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டறிந்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் காவல்துறையினர் இதனை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், செல் போனில் ஆபாச படங்களை எளிதாக பார்க்க முடிவதால் தான் இது போன்ற பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறதா? என்பதையும் விசாரிக்கப்பட வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

-தமிழ் 

தெலுங்கானாவில் 9 மாத கைக்குழந்தையை கொலை செய்த கொடூரன்..! பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்மஅடி
More News >>